பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை நிகழ்த்தியவர்! ராகுல் காந்தி
தொகுதி மறுவரையறை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு...
பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
Advertisement
பாஜக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமே. பாஜக என்பது இந்தியா அல்ல. பிரதமரும் பாஜகவும் இந்தியாவின் ராணுவ வீரர்கள் இல்லை. பிரதமர், பாஜகவைப் பற்றி ஏதாவது பேசினால் உடனடியாக ராணுவ வீரர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
நம்மிடம் ஒரு பிரபலமான வித்தைக்காரர் இருக்கிறார். பல வித்தைகளை நிகழ்த்துகிறார். இங்கு அவர் நிகழ்த்திய மாயாஜாலத்தை 300- 400 பேர் கண்டுகளித்தனர்.
பிரதமர் மோடிதான் வித்தைக்காரர். பாலகோட் தாக்குதல், பணமதிப்பிழப்பு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை நிகழ்த்திய மாயாஜாலக்காரர் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுவிட்டார்.
மேஜிக் காட்டுவதுபோல 3 மசோதாக்களையும் ஒன்றன்மீது ஒன்றாக மறைத்துக் கொண்டு வந்துள்ளார். வித்தைக்காரரும் தொழிலதிபருக்கும் இடையே ஒரு கூட்டணி இருப்பதை அனைவரும் அறிவார்கள்.
மசோதா நிறைவேறாது எனத் தெரிந்தும் பீதியில் இதனை கொண்டுவந்துள்ளனர். தென் மாநிலங்கள் பயப்பட வேண்டாம். இந்த மசோதாக்கள் நிறைவேறாது" என்று பேசினார்.
பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி இவ்வாறு பேசியதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
பிரதமர் பற்றி பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் குறித்து ராகுல் காந்தி முறையற்ற சொற்களைப் பயன்படுத்துவதாகவும், பாலகோட் தாக்குதல்கள், 'ஆபரேஷன் சிந்தூர்' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி நாட்டின் நற்பெயருக்கும், ராணுவத்திற்கும் களங்கம் விளைவிப்பதாகவும் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை முன்வைத்தார்.