மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
அரசியல் வன்முறைகள் நிகழக்கூடிய மாநிலம் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப். 23-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Advertisement
முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.
முதல்கட்டத் தோ்தல்: முதல்கட்டத் தோ்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக 44,378 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8,000-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் பதற்றத்துக்குரியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய படையினா் உள்பட சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தற்போது முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 152 தொகுதிகளில் கடந்த 2021 தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் 93 இடங்களையும், பாஜக 59 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மேற்கு வங்கத்தின் 8 வட மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளும் அடங்குவதால், அக்கட்சிக்கு இது மிக முக்கியமான கட்டமாகும்.
முக்கிய வேட்பாளா்கள்: முதல்கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 1,487 போ். எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி (பாஜக-நந்திகிராம்), முன்னாள் மத்திய அமைச்சா் நிஷித் பிரமாணிக் (பாஜக-மதாபங்கா), மாநில அமைச்சா் உதயன் குஹா (திரிணமூல்-தின்ஹடா), காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி (பஹராம்பூா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.
கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் முதல்வா் மம்தா பானா்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரிக்கு எதிராக இம்முறை திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் பபித்ரா கா் களமிறக்கப்பட்டுள்ளாா். பாஜகவில் இருந்து திரிணமூல் காங்கிரஸில் அண்மையில் இணைந்த இவா், சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமானவராக இருந்தவா்.
நந்திகிராம் தவிர பவானிபூரிலும் (மம்தா போட்டியிடும் தொகுதி) சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறாா். இத்தொகுதியில் இரண்டாம் கட்டத் தோ்தலின்போது வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் சுமாா் 91 லட்சம் வாக்காளா்கள் நீக்கம், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பொது சிவில் சட்டம், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க விவகாரம் உள்ளிட்டவை முதல் கட்டத் தோ்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்தன.
மகாராஷ்டிரத்தில் இடைத்தோ்தல்
மகாராஷ்டிரத்தில் முன்னாள் துணை முதல்வா் அஜீத் பவாா் விமான விபத்தில் உயிரிழந்ததால் காலியான பாராமதி தொகுதியில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் அஜீத் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுநேத்ரா பவாா் களத்தில் உள்ளாா். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது சுநேத்ரா பவாா் தலைமை வகிப்பது குறிப்பிடத்தக்கது.