மே. வங்கத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர் தாக்கியதில் முதியவர் பலி? குடும்பத்தினர் புகார்!
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாக்கியதில் முதியவர் இறந்ததாகக் குற்றச்சாட்டு...
ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் முதியவரைத் தாக்கியதில் அவர் இறந்ததாகக் குற்றஞ்சாட்டி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தின் நார்த் 24 பார்கனாஸ் மாவட்டத்தில் முதியவர் துளசி அதிகாரி என்பவருடன் வடக்கு பாரக்பூர் நகராட்சி வார்டு 23-இன் கவுன்சிலர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரபீந்திர நாத் பட்டாசார்யாவுக்கு ஏற்பட்ட தகராறில் கவுன்சிலர் தாக்கியதால் அந்த நபர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
துளசி அதிகாரியின் வீட்டின் முன் சட்ட விரோத கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாக அவர் குற்றம்சாட்டி வந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சனிக்கிழமை(பிப். 7) சென்ற பட்டாசார்யாவுக்கும் துளசி அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரத்தில், அதிகாரியையும் அவரது மகனையும் கையால் குத்தியதுடன் அவரைத் தமது காலால் மிதித்து ரபீந்திர நாத் துன்புறுத்தியதாக அதிகாரியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதில், நிலை தடுமாறி மயங்கி விழுந்த அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
Advertisement
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கவுன்சிலர் மீது போலீசிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்து போலீசார் ரபீந்திர நாத் பட்டாசார்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.