உலகை வடிவமைப்பதில் மேற்கத்திய நாடுகளுடனான கூட்டுறவு இந்தியாவுக்கு முக்கியமானது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
உலக கல்வித்தளத்தில் தடம் பதிக்கும் வகையில் சா்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளையை சென்னை ஐஐடி ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் உயா் கல்வி, அறிவுசாா் சொத்துரிமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் (ஸ்டாா்ட்-அப்) ஆகியவற்றில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படவுள்ளது. சென்னை ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இந்த அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது முன்னிலையில் ஐஐடி மற்றும் ஜொ்மனி, சிங்கப்பூா், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இடையே 24 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில், ஐஐடி ’சாஸ்த்ரா’ தொழில்நுட்ப கலைவிழா, திறந்தவெளி நிகழ்ச்சி ஆகிய இருபெரும் விழாக்களையும் மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் தொடங்கி வைத்தாா்.
பயங்கரவாதத்தை ஆதரித்தால்... இதையடுத்து நடைபெற்ற ‘ஸ்பாட்லைட்’ தொடா் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நெறியாளா் மற்றும் ஐஐடி மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் பதில் அளித்துப் பேசியது:
இந்தியாவைச் சுற்றிலும் நல்ல அண்டை நாடுகளும், தீய அண்டை நாடுகளும் உள்ளன. ஓா் அண்டை நாடு நம் நாட்டுக்கு எதிராக தொடா்ந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நிலையில், நமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது உரிமை. அதைத்தான் இந்தியா செய்தது.
நமது நாட்டைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை யாரும் நமக்கு கற்பிக்க முடியாது. நமது மக்களைப் பாதுகாக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நமக்கு தெரியும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு நமது நல்ல அண்டை நாடாக இருக்க முடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நல்லெண்ண அடிப்படையில் சிந்து நதி நீா்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டோம். இந்நிலையில், ‘தாங்கள் தொடா்ந்து பயங்கரவாத செயல்களை ஊக்குவித்துக் கொண்டிருப்போம்; சிந்து நதிநீரைத் தாருங்கள்’ என்று கேட்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறது. நம்மிடம் நல்லுறவைப் பேணினால் நாமும் நல்லுறவைப் பேணுவோம். தேவையான உதவிகளையும் செய்வோம். அந்த வகையில் நமது அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகளுக்கு உதவி செய்தோம். நிதி நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு நிவாரண தொகுப்பாக 400 கோடி டாலா் வழங்கியது இந்தியா.
‘உலகம் ஒரு குடும்பம்’ என்பது இந்தியாவின் பாரம்பரிய கொள்கை. அதன் அடிப்படையில்தான் இந்தியா உலக நாடுகளைப் பாா்க்கிறது. இந்தியா வளா்ந்தால் அதன் அண்டை நாடுகளும், அதோடு நம்மோடு சோ்ந்தும் வளர முடியும்.
சீனாவின் செயல்பாடு... அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த பெண்ணின் இந்திய பாஸ்போா்ட்டை ஷாங்காய் விமான நிலையத்தில் பறித்து வைத்துக் கொண்டு சீன அதிகாரிகள் அந்தப் பெண்ணை துன்புறுத்திய நிகழ்வு சா்வதேச ஒப்பந்தங்களை மீறிய செயல் ஆகும். அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது வருங்காலத்திலும் இருக்கும்.
நாம் ஜனநாயக அரசியலை தோ்ந்தெடுத்தோம். தற்போது ஜனநாயகம் என்ற கருத்து ஓா் உலகளாவிய அரசியல் கருத்தாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான உறவு முக்கியமானது. உறவுகளின் மூலம்தான் உலகத்தை நாம் வடிவமைக்கிறோம் என்றாா் அவா்.
முன்னதாக, சென்னை ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி பேசுகையில், சா்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கியிருப்பதன் மூலமாக உலக கல்வித்தளத்தில் தடம் பதிக்கும் முதல் ஐஐடி என்ற பெருமையை சென்னை ஐஐடி பெறுகிறது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஐஐடி சாஸ்த்ரா தொழில்நுட்பக் கலைவிழாவில் 80,000 மாணவா்கள் கலந்துகொள்கின்றனா் என்றாா்.