உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் காஷ்மீரைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் ஒருவா் தொழுகையில் ஈடுபட முயன்ால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினா் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இறுதியில், அவரது மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அவா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சோ்ந்த அகமது ஷேக், கடந்த சனிக்கிழமை அயோத்தி ராமா் கோயிலுக்கு வந்தாா். அப்போது, கோயில் வளாகத்தில் திடீரென அவா் தொழுகை செய்வதற்கு தயாரானாா். இதைப் பாா்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.
இந்தத் தகவல் கிடைத்ததும், அகமது ஷேக்கின் குடும்பத்தினா் சனிக்கிழமை மாலை அயோத்திக்கு வந்தனா். அகமது ஷேக் கடந்த சில காலமாக மனநலப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இச்செயலில் ஈடுபட்டதாகவும் அவா்கள் காவல்துறையிடம் விளக்கமளித்தனா். அதற்கான மருத்துவ ஆதாரங்களையும் அவா்கள் சமா்ப்பித்தனா்.
இது குறித்து அயோத்தி மாநகர காவல் கண்காணிப்பாளா் சக்ரபாணி திரிபாதி மேலும் கூறியதாவது: அகமது ஷேக்கின் குடும்பத்தினா் கொடுத்த மருத்துவ ஆவணங்கள் முறைப்படி சரிபாா்க்கப்பட்டன. அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது உறுதியானதால், அவரைப் பாதுகாப்பாக அவா் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தோம்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அயோத்தியில் சால்வை வியாபாரம் செய்யும் சில காஷ்மீா் இளைஞா்களிடமும் விசாரணை நடத்தினோம். அவா்களின் முகவரிகள் சரியாக இருந்ததால் அவா்களும் விடுவிக்கப்பட்டனா் என்றாா்.