தெலங்கானாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் தனக்குத்தானே கல்லறையைக் கட்டி வைத்த நிலையில் அவர் ஜனவரி 11 (நேற்று) உயிரிழந்துள்ளார்.
லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நக்கா இந்திரய்யா. தனது துயரமான நேரத்தில் தனது பிள்ளைகளுக்கு எந்தச் சுமையையும் ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்காக ரூ.12 லட்சம் செலவில் இறுதி ஓய்விடத்தைக் கட்டியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது மனைவியின் கல்லறைக்கு அருகில் தனது சொந்தக் கல்லறையைக் கட்டிய இந்திரய்யா, அந்த இடத்தில் வாழ்க்கை மற்றும் மரணத்தின் உண்மைகள் குறித்த செய்தியுடன் ஒரு கல்வெட்டையும் நிறுவியிருந்தார்.
அவர் உயிருடன் இருக்கும்போது, அந்த இடத்திற்குச் சென்று சுற்றும் உள்ள இடத்தைச் சுத்தம் செய்வதும், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அமைதியாக அமர்ந்து தியானிப்பது ஆகியவற்றை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த முதியவரின் வாழ்க்கை, அயராத ஈகை உணர்வால் நிறைந்திருந்தது.
இதுதொடர்பாக இந்திரய்யாவின் மூத்த சகோதரர் நக்கா பூமய்யா கூறுகையில்,
அவர் தனக்கென்று சொந்தக் கல்லறையைக் கட்டினார். மேலும் கிராமத்தில் ஒரு தேவாலயத்தையும் அவர் கட்டினார். கிராமத்திற்காக அவர் பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். அவர் தனது சொத்தை அவரது நான்கு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்தார். அவர்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொடுத்தார், குடும்பத்தில் ஒன்பது திருமணங்களை நடத்தி வைத்தார்.
கிராமத்தில் உள்ள சீனிவாஸ் என்பவர் கூறுகையில்,
இந்திரய்யாவின் வழிகாட்டுக் கொள்கையை நினைவு கூர்ந்தார். நீங்கள் சேமித்துவைத்தவை அனைத்தும் நழுவிச்சென்றுவிடும், ஆனால் மற்றவர்களுக்காக நீங்கள் செய்த நல்ல விஷயங்கள் என்றும் மறையாது நிலைத்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை இந்திரய்யா காலானதைத் தொடர்ந்து, அவருக்கென சொந்தமாகக் கட்டிய கல்லறையில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவரது இறுதி ஆசை நிறைவேற்றப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்காகக் கிராம மக்கள் பலர் திரண்டிருந்தனர்.
கல்லறை கட்டுவது பலருக்குத் துக்கத்தை ஏற்படுத்தினாலும் தான் மகிழ்ச்சியோடு உணர்வதாக இந்திரய்யா முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.