சத்தீஸ்கரில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிஜப்பூர் மாவட்டத்தின் தென்மேற்கு வனப் பகுதியில், ரகசியத் தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் காவல் படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 16) அதிகாலை முதல் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஏகே47 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், நக்சல் தளபதி எனக் கூறப்படும் பாபா ராவ் என்பவர் உள்பட சுமார் 20-க்கும் அதிகமான நக்சல்கள் பிஜப்பூரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் தளபதி பாபா ராவின் மனைவி ஊர்மிளா என்பவர் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.