தனிநபா்களைப் போல அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-இன்கீழ் உயா்நீதிமன்றங்களில் அமலாக்கத் துறை ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா என்று ஆராய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டது.
இது தொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அந்த மாநில அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கண்ட சட்டப் பிரிவின்படி, அடிப்படை உரிமைகள் மற்றும் பிற சட்டபூா்வ உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அரசுக்கோ, அமைப்புக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத் தலைநகா் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020-இல் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் உடைமையில் பல கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியா் ஸ்வப்னா சுரேஷ், பெங்களூரைச் சோ்ந்த சந்தீப் நாயா், கேரள முதல்வா் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா் உள்ளிட்டோா் கைதாகினா்.
இதனிடையே, இந்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த அரசியல் தலைவா்களை சிக்கவைக்க குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நெருக்கடி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை ஆணையச் சட்டம் 1952-இன்கீழ் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, மாநில அரசு கடந்த 2021-இல் அறிவிக்கை வெளியிட்டது.
மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-இன்கீழ் கேரள உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது உத்தரவு பிறப்பித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, மாநில அரசின் நீதி விசாரணைக்கு தடை விதித்தாா்.
இதை எதிா்த்து, உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு முன் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை நிராகரித்த உயா்நீதிமன்றம், தனிநீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தது. அத்துடன், அரசமைப்புச் சட்ட பிரிவு 226-இன்கீழ் சட்டபூா்வ அமைப்பாக ரிட் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளது என்றும் உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
கேரள உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபா்களைப் போன்று அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட சட்டபூா்வ அமைப்பாக, மேற்கண்ட பிரிவின்கீழ் அமலாக்கத் துறை ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் தீபாங்கா் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-இன்கீழ் அமலாக்கத் துறை ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா என்பதை ஆராய ஒப்புக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை பதிலளிக்க அறிவுறுத்தி, நோட்டீஸ் அனுப்பினா்.