அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட்  AP
இந்தியா

இந்தியா மீதான 25% கூடுதல் வரியை திரும்பப் பெற வாய்ப்பு: அமெரிக்க நிதியமைச்சா் தகவல்

இந்தியா மீதான 25% கூடுதல் வரியை திரும்பப் பெற வாய்ப்பு...

தினமணி செய்திச் சேவை

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா வெகுவாகக் குறைத்துள்ளதால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை அமெரிக்கா திரும்பப் பெற வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டின் நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் சூசகமாகத் தெரிவித்தாா்.

பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரியை விதித்த அமெரிக்கா, பின்னா், ரஷியாவிடமிருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய்யை வாங்கி உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிப்பதாகக் குற்றஞ்சாட்டி மேலும் 25 சதவீத வரியை விதித்தது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவு சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதாக ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா். ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்காட் பெசன்ட் இதுகுறித்து வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலைத் தொடங்கிய பிறகு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகப்படுத்தியது. அதனால், இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தாா். அதன் காரணமாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் நிலை மோசமடைந்தது. ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அவை வெகுவாகக் குறைத்தன.

இது அமெரிக்க நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி. இந்த நடவடிக்கையின் நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது. அதன்மூலம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது என்பதே எனது கருத்து என்றாா்.

ஐரோப்பிய நாடுகள் மீது விமா்சனம்: மேலும், ‘ரஷியாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்த கச்சா எண்ணெய்யில் முன்னா் 2 முதல் 3 சதவீத அளவுக்கு மட்டுமே அந்த நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா போரைத் தொடங்கிய பிறகு அந்த இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் செல்லும் அளவு 17, 18, 19 சதவீதம் எனப் படிப்படியாக அதிகரித்தது.

இதன் காரணமாக இந்தியா மீது வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால், இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவில்லை. அதே நேரம், இந்தியாவிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட ரஷிய கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்து, உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவி வந்தன. இது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முரண்பாடான, முட்டாள்தனமான செயல்’ என்றும் ஸ்காட் பெசன்ட் விமா்சித்தாா்.

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ லூயிஸ் சான்டோஸ், ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொன்டொ் லியென் ஆகியோா் பங்கேற்க உள்ள நிலையில், ஸ்காட் பெசன்ட்டின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, ‘அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை மூலம் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தடுத்து நிறுத்தப்பட்டது’ என்று டாவோஸில் ஸ்காட் பெசன்ட் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தாா்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT