நேபாளத்தில் ஜென் ஸி போராட்டத்தின்போது சிறையிலிருந்து தப்பித்த குஜராத்தை சேர்ந்தவரை காவல் துறையினர் இன்று (ஜன. 27) கைது செய்தனர்.
குஜராத் மாநில குற்றப்பிரிவைச் சேர்ந்த சிறப்பு செயல்பாட்டுக் குழு தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையை அடுத்து குற்றவாளி பிடிபட்டுள்ளார்.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் நேபாளத்தின் முக்கிய அரசுக் கட்டடங்கள் சூறையாடப்பட்டன. போராட்டத்தின் ஒரு பகுதியாக நேபாளத்தின் பாந்த்ரா சிறையில் இருந்த சில கைதிகள் தப்பியோடினர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குஜராத்தை சேர்ந்த தர்மேஷ் சுனாரா என்பவரும் சிறையில் இருந்து தப்பியோடினார்.
சிறையில் இருந்து தப்பியவர்களைத் தேடும் பணியில் அண்டை நாட்டு உதவியுடன் நேபாள காவல் துறை ஈடுபட்டிருந்தது.
பாங்காக்கிலிருந்து ரூ. 13 கோடி மதிப்புடைய போதைப்பொருள்களை கடத்திக்கொண்டு நேபாளத்திற்குச் சென்றபோது அந்நாட்டு காவல்துறையினர் சுனாராவை கைது செய்து பாந்த்ரா சிறையில் அடைத்துள்ளனர்.
முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இருந்ததால், குஜராத் மாநில காவல் துறையின் உதவியை நேபாள காவல் துறை நாடியுள்ளது. தொழில்நுட்ப கண்காணிப்பு, மனித நுண்ணறிவு தொடர்பான தகவல்கள் மூலம் சுனாராவை குஜராத் மாநில குற்றப்பிரிவைச் சேர்ந்த சிறப்பு செயல்பாட்டுக் குழு இன்று கைது செய்தது.
இவரை நாடு கடத்துவதற்காக நேபாள சிறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.