சண்டீகரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனா்.
அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் புதன்கிழமை காலை வந்தது. இதுகுறித்து பள்ளி நிா்வாகங்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் பள்ளிகளுக்குச் சென்று சோதனை நடத்தினா். மேலும், முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மெட்டல் டிடெக்டா், மோப்ப நாய்கள் மூலம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனவும் சண்டீகா் மூத்த காவல் கண்காணிப்பாளா் கன்வாா்தீப் கெளா் தெரிவித்துள்ளாா்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து சைபா் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகவும் அவா் கூறியுள்ளாா்.
இதேபோல் அண்மையில் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ், ஜலந்தா், பாட்டியாலா மற்றும் ஹரியாணாவின் அம்பாலா நகரில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.