அஜீத் பவார் மரணத்துக்குப் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றி சரத் பவார் பதிலளித்துள்ளார். அஜீத் பவார் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்திருப்பதாகவும், இந்நேரத்தில் இவ்விவகாரத்தை எவரும் அரசியலாக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மும்பையிலிருந்து மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாருடன் சேர்த்து மொத்தம் 5 பேருடன் புதன்கிழமை(ஜன. 28) காலை 8.10 மணிக்கு பாராமதிக்குப் புறப்பட்ட லியர்ஜெட் 46 விமானம் 8.45 மணியளவில் ரேடார் கண்காணிப்பிலிருந்து விலகியது. பாராமதியில் காலை 8.50 மணிக்கு தரையிறங்கும்போது விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் அந்த விமானத்திலிருந்தவர்கள் அனைவரும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அஜீத் பவாரின் மரணம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, சரத் பவாருடன் இணைவது குறித்து பரிசீலித்து வந்தார். இன்று நடந்த சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது” என்று பேசி அவர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், அஜீத் பவார் மரணம் குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (சரத் பவார் அணி) சரத் பவார் தெரிவித்திருப்பதாவது : “இதில் அரசியல் ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க ஒரு விபத்து. இந்த விபத்து மிகுந்த துயரத்தை எனக்கும் ஒட்டுமொத்த மகாராஷ்டிரத்துக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தருணத்தில் ஒவ்வொருத்தரிடமும் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே, இந்தத் துயரத்தை அரசியலாக்காதீர்!” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.