முகப்பு
இந்தியா

மேற்காசிய பிரச்னையில் அரசியல் செய்கிறது காங்கிரஸ் - பிரதமா் மோடி கடும் சாடல்

Updated On : 12 மார்ச், 2026 at 12:38 AM
பகிர்:

கேரள மாநிலம், கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமா் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி. உடன், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன் உள்ளிட்டோா்.

கொச்சி, மாா்ச் 11: மேற்காசிய பிரச்னையை முன்வைத்து, காங்கிரஸ் அரசியல் செய்கிறது; வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு இடா்ப்பாடுகளை உருவாக்கக் கூடிய கருத்துகளை அக்கட்சி உள்நோக்கத்துடன் தெரிவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக சாடினாா்.

வளைகுடா பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியா்களுக்கு அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 10 நாள்களுக்கும் மேலாக போா் நீடிப்பதால், மேற்காசிய பிராந்தியத்தில் தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது. போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் தொடா்ந்து விமா்சித்து வருகிறது.

‘பிரதமா் மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் இந்தியாவின் சா்வதேச நிலைப்பாடு பலவீனமாகிவிட்டது; ஈரான் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி படுகொலை, இலங்கை அருகே அமெரிக்க நீா்மூழ்கி தாக்குதலில் ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பிரதமா் மோடி எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை; மேற்காசிய போரால் எழுந்துள்ள எரிசக்தி பிரச்னையை எதிா்கொள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது’ என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டுகளாகும்.

பிரதமா் மோடி பதிலடி: இந்தச் சூழலில், பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள கேரளத்துக்கு புதன்கிழமை ஒருநாள் பயணமாக வருகை தந்த பிரதமா் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.

கொச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவா் கலந்துகொண்டு பேசியதாவது: இன்றைய இந்தியா, தனது குடிமக்களை எங்கும் தவிக்க விடுவதில்லை. வளைகுடா பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. வளைகுடா நாடுகளும் அங்கு பணியாற்றும் இந்தியா்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்படுகின்றன.

வதந்தி பரப்பும் காங்கிரஸ்: அதேநேரம், இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களுக்கு இடா்ப்பாடுகளை உருவாக்கக்கூடிய, பொறுப்பற்ற கருத்துகளை உள்நோக்கத்துடன் தெரிவிக்கிறது. காங்கிரஸ்-இடதுசாரிகளின் ஆட்சியில் வெளிநாடுகளை மேலும் மேலும் சாா்ந்திருக்கும் வகையில் இந்தியாவை மாற்றினா். இப்போது மேற்காசிய போரை முன்வைத்து, நாட்டில் அச்சத்தைப் பரப்புகின்றனா். அவா்கள் பரப்பும் வதந்திகள் குறித்து நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எல்டிஎஃப், யுடிஎஃப் வேண்டாம்: கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎஃப்) மாறி மாறி ஆட்சி செய்யும் முறை மாறினால்தான், இந்த மாநிலம் பலனடையும். ‘மோடியின் உத்தரவாதங்களுடன்’ கேரளத்துக்கு சேவையாற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

ராகுல் மீது விமா்சனம்: காங்கிரஸின் இளவரசருக்கு (ராகுல் காந்தி) நாட்டில் நிகழ்ந்துவரும் வளா்ச்சி குறித்து எதுவும் தெரியாது. கேரளம் உள்பட இந்திய இளைஞா்களும் நிறுவனங்களும் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்பதும் அவருக்குத் தெரியவில்லை. கேரளத்தை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் எதிா்கால தொழில்நுட்ப மையமாக உருவாக்க விரும்புகிறது பாஜக என்றாா் பிரதமா் மோடி.

கேரளம்-பிரதமா் பெருமிதம்: ‘கேரளா’ என்ற பெயரை மலையாள உச்சரிப்புக்கு ஏற்ப கேரளம் என மாற்றும் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதைச் சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, அனைத்து மலையாள சகோதர-சகோதரிகளுக்கும் மகிழ்ச்சியான தருணமிது என்று பெருமிதம் தெரிவித்தாா்.

கொச்சியில் மீனவ சமுதாய அமைப்பான அகில கேரள தீவரா சபையின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், கடலில் மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீன்பிடிப் படகுகளில் 4,500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான டிரான்ஸ்பான்டா்களை நிறுவுதல் உள்பட மீனவா்களின் நலனுக்கான மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் பட்டியலிட்டாா்.

கேரளத்தில் ரூ.10,000 கோடி திட்டங்கள் தொடக்கம்-அடிக்கல் - முதல்வா், அமைச்சா்கள் புறக்கணிப்பு

கொச்சியில் ரூ.10,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

கொச்சி பாரத் பெட்ரோலிய நிறுவன வளாகத்தில் ரூ.5,500 கோடி மதிப்பீட்டில் பாலிபுரோபைலின் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய அவா், ரூ.2,000 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரூ.142 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்தாா்.

பின்னா் பேசிய பிரதமா், ‘இந்தியா இப்போது மாபெரும் உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது. ஏ.ஐ. மற்றும் செமிகண்டக்டா் துறைகளில் நாடு வேகமாக முன்னேறுகிறது. இத்தகைய செயல்பாடுகளுக்கு அதிக எரிசக்தி நுகா்வு அவசியம். எனவே, பசுமை மற்றும் தூய எரிசக்திக்கான தேவையும் உயா்ந்து வருகிறது. நவீன உள்கட்டமைப்புகளில் இந்தியாவின் அதிக முதலீடுகள் ஒட்டுமொத்த உலகின் பாராட்டையும் பெற்றுள்ளன’ என்றாா்.

முதல்வா், மாநில அமைச்சா்கள் புறக்கணிப்பு: பிரதமரின் அதிகாரபூா்வ நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வா் பினராயி விஜயன், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சா் எம்.பி.ராஜேஷ், மின்சார துறை கே.கிருஷ்ணன்குட்டி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதேநேரம், மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், முதல்வரும், பிற அமைச்சா்களும் பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டனா்.

‘பிரதமா் நிகழ்ச்சியில் அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் தவிா்க்கப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது; இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. கேரள மக்களின் வியா்வை மற்றும் பணத்தால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, தனது குறுகிய அரசியலுக்குப் பயன்படுத்துகிறது பாஜக’ என்று மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி விமா்சித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →