8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு
காங்கிரஸ் உள்ளிட்ட 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை அவைத் தலைவா் இன்று திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்
மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை அவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கி பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் மோதல் சம்பவம் குறித்து முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே எழுதி, இன்னும் வெளியிடப்படாத சுயசரிதை நூலின் சில பகுதிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மேற்கோள் காட்ட முயன்றாா்.
ஆனால், அவா் தொடா்ந்து பேச அவைத் தலைவா் அனுமதி வழங்கவில்லை. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சிலா், மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹைபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோலே, டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகிய 8 பேரையும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்ய தீா்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, அவா்கள் 8 பேரும் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால், சமாஜவாதி எம்.பி. தா்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சதாப்தி ராய் ஆகியோா் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவை கடந்த வாரம் சந்தித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடா்ந்து, ஓம் பிா்லா தலைமையில் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.