உ.பி. மத நிகழ்வில் பிரசாதம் உண்ட 60 பேருக்குப் பாதிப்பு!
மத நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட பிரசாதம் பற்றி..
உத்தரப் பிரதேசத்தில், தனியார் இல்லத்தில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சியின்போது பிரசாதம் சாப்பிட்ட 62 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கன்னோஜ் மாவட்டத்தின் சிமுவாபூர் கிராமத்தில் அமைந்துள்ள முன்னா லால் காஷ்யப் என்பவரின் இல்லத்தில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சத்யநாராயண பூஜை நிகழ்ச்சியின் போது, பஞ்சாமிர்தம் என்ற பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
நேற்றிரவு பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகு, பலரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அனைவரும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆகாங்ஷா கூறுகையில்,
நேற்றிரவு 10.30 மணியளவில் 62 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த 14 பேர் திர்வா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
மீதமுள்ளவர்களுக்கு நரம்புவழிச் செலுத்தும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட ஆட்சியர் அசுதோஷ் மோகன் அக்னிஹோத்ரி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுவதேஷ் குப்தா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் ஆகியோர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவர்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்கத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.
உணவில் கலப்படம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.