காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் கைசிக மாஹாத்மிய உற்ஸவம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோவிலில் நடப்பது போன்ற கைசிக மாஹாத்மிய உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோவிலில் நடப்பது போன்ற கைசிக மாஹாத்மிய உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் அழகிய நம்பிராயர் முன் சிறந்த பக்தரான நம்பாடுவான் கைசிக பண் இசைத்து, இசையின் பலனாக சோமசர்மாவின் சாபத்தை போக்கினார். இந்த நிகழ்வு நடந்ததாக வராஹப்பெருமாள் பூமிப் பிராட்டிக்கு உபதேசித்த ஸ்ரீ வராஹ புராணத்தில் உள்ளதை விளக்கும் வகையில், ஸ்ரீரங்கம், திருக்குறுங்குடி கோவில்களில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் துவாதசி நாளில் கைசிக மாஹாத்மிய உற்ஸவம் நடத்தப்படுகிறது.
இதேபோன்ற உற்ஸவம் காரைக்காலில் மூலவராக, கிடந்த கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் தலத்தில் (ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் கோவில்) ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி உற்ஸவர் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பச்சைவடம் என்னும் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களிடையே உற்ஸவத்தின் சிறப்பு குறித்து ஸ்ரீ உ.வே.கு. அரங்கநாதாச்சாரியர் கைசிக புராணம் படித்தார். புராணத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முடிவில் சுவாமி பிராகார உலா நடைபெற்றது. அப்போது சுவாமி முன் பெரிய கண்ணாடி நிறுத்தப்பட்டு, பெருமாள் கண்ணாடி சேவையையும் பக்தர்கள் தரிசித்தனர்.
இறுதியில் மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபா செய்திருந்தது.