சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை கொடியேற்றம்!
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நாளை டிச.9-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்கு சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் ஆர்.நாகாபரண பூஷண தீட்சிதர் பசுக்கொடியை ஏற்றி உற்சவத்தை தொடங்கி வைக்கிறார். உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜதீட்சிதர், துணைச் செயலாளர் எஸ்.டி.ருத்ரகணேஷ் தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர். உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் நடைபெறுகிறது.
வருகிற டிச.17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா, இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.18-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச.19-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.