வீராணம்ஏரியில் அதிகளவு நீர் தேக்கி வைப்பதால் வெள்ள அபாயம்: விவசாயிகள் அச்சம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். மழைக்காலங்களில் குறைந்தளவே நீரை தேக்கி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது சென்னைக்கு
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரியில் மழைக்காலங்களில் அதிகளவு நீர் தேக்கி வைப்பதால் வெள்ள அபாயம் ஏற்படும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். மழைக்காலங்களில் குறைந்தளவே நீரை தேக்கி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் நோக்கில் பாசனத்திற்கு குறைந்தளவு நீர் திறந்துவிட்டு, அதிகளவு நீரை பொதுப்பணித்துறையினர் தேக்கி வைத்துள்ளனர். தற்போது வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஏரியில் மொத்தம் 45.90 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து பாசனத்திற்கு 201 கனஅடியும், சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தெரிவித்தது:
மழைக்காலத்தில் தற்போது வீராணம்ஏரியில் அதிகளவு நீரை தேக்கி வைப்பது ஆபத்தாகும். கடந்த வருடங்களில் இதே போன்று மழைக்காலங்களில் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நோக்கில் ஏரியில் அதிகளவு நீரை தேக்கி வைத்தனர். கனமழையில் கூடுதலாக நீர்வரத்து வந்ததால், ஏரியின் பாதுகாப்பு நலன் கருதி ஏரியிலிருந்து அதிகளவு நீர் உடனடியாக திறக்கப்பட்டதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெற்பயிர்கள் நாசமாயின. ஆண்டு தோறும் இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு கனமழை இருக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்தால் கூடுதலாக நீர் வரத்து வரும். எனவே மழைக் காலங்களில் குறைந்தளவே நீரை வீராணம்ஏரியில் தேக்கி வைக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்கிறார் சி.ஆறுமுகம்.