முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்க நெசவுப் பூங்காவுக்கு அனுமதி

தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க பல்லடம் உயர் தொழில் நுட்ப நெசவுப் பூங்காவிற்கு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:

தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க பல்லடம் உயர் தொழில் நுட்ப நெசவுப் பூங்காவிற்கு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அந்தப் பூங்காவில் நிலவிய மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள ஜவுளித் தொழிலில் சிறு மற்றும் நடுத்தர விசைத்தறி நெசவாளர்களின் தொழில் மேம்படவும், உயர் தொழில் நுட்ப நிலைக்கு உயர்த்திடவும் பல்லடம் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா 65 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.55.74 கோடி செலவில் நிறுவப்பட்டது.
 அப் பூங்காவில் 400 நவீன தறிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள உயர் தரமான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூங்கா மூலம் நேரடியாக 3 ஆயிரம் பேரும், மறைமுகமாக 10 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
 பூங்காவில் உள்ள தொழிற்கூடங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மின்சார வாரியம் சார்பில் பூங்கா வளாகத்தில் துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை. எனவே, மின்சார வாரியத்தின் பிரத்யேக அனுமதி பெற்று, மின்கட்டமைப்பு வசதி ரூ.6 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், பூங்காவின் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்க மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
 இதுகுறித்து பல்லடம் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா தலைவர் பி.கே.செந்தில்குமார் கூறியது:
 பூங்காவிற்கு தடையில்லா மின்சாரம் பெறுவதற்காக பிரத்யேக மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்பாதை மூலம் தனியாரிடம் இருந்தும் மின்சார பெறப்படும். இதன் மூலம் மின்வெட்டு நிலவும் நேரத்தில் தனியாரிடம் வாங்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பூங்காவிற்கான தடையில்லா மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 மின் தடை காரணமாக ஜெனரேட்டர் மூலம் ஜவுளி இயந்திரங்கள் இயக்க ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.15 செலவாகிறது. தமிழக அரசு ஒரு யூனிட் ரூ.7-க்கு விற்பனை செய்கிறது.
 தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.9.50 வாங்கப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து விலைக்கு மின்சார வாங்க வேண்டி உள்ளதால், தடையில்லா மின்விநியோகத்தை மின்சார வாரியமே வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.