குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை குறிப்பிட்ட நாள்களில் முடிக்காமல்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை குறிப்பிட்ட நாள்களில் முடிக்காமல் காலதாமதம் செய்து வருவதாக கூறி செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம் அடைந்தார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார்.
இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசுகையில், ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடையும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்கள் அனைத்தையும் தகுதியானவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்களே ஆவார்கள். இந்த அலுவலர்கள் அரசின் அச்சாணியாகவும் விளங்கி வருகின்றனர்.
Advertisement
Advertisement
அதேபோல், இந்த மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட நாள்களில் செய்து முடிக்க வேண்டும் என்றார். பின்னர் ஒவ்வொரு துறையாக நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளின் விவரம் குறித்து அந்தந்த துறைகளின் அதிகாரிகளை கேட்டறிந்தார்.
இதில், முதலில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து திட்ட அலுவலர் பிரபாகரிடம் விவரங்களை கேட்டார். அதற்கு அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இத்துறையின் சார்பில் குக்கிராம வளர்ச்சித் திட்டம் சார்பில் 1503 பணிகள் தேர்வு செய்யப்பட்டன. இதுவரையில் 1444 பணிகள் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மீதமுள்ள பணிகள் வருகிற 20 நாள்களுக்குள் முடிவடைய இருப்பதாக தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மழை பெய்யாத நிலையில் எவ்வாறு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுகிறது. இதில், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலன பொதுமக்கள் 10 முதல் 12 நாள்களுக்கு ஒவ்வொரு வார்டுக்கும் சுழற்சி முறையில் குடிநீர் தண்ணீர் வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயனடையும் வகையில் சீவலப்பேரி, வல்லநாடு மற்றும் முக்கூடால் ஆகிய பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.287 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் எந்த வழித்தடங்களில் நிறைவேற்றப்படுகிறது. மேல் நிலைத் தொட்டிகள், நீரேற்று நிலையம் (ஜம்பிங் செய்யும் இடம்) எங்குள்ளது. இது தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தெரியவில்லை என்கிறார்கள். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் நடத்தக் கூடாது. மேலும், அப்பணிகளின் தன்மை குறித்து கூட்டுக்குடிநீர் திட்ட செயற்பொறியாளரிடம் கேட்டார். அதற்கு செயற்பொறியாளர் ஜெயபால் கூறுகையில், ஒப்பந்தம் பெற்றவர் ஆமை வேகத்தில் பணிகளை செய்து வருகிறார்.
அதோடு, கிராமங்களில் உள்ளவர்களுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டுள்ளதாகவும், இதுபோன்ற காரணங்களில் தான் தாமதமாகி வருவதாக தெரிவித்தார். கோடிக்கணக்கான ரூபாயில் நடந்து வரும் திட்டத்தை குறிப்பிட்ட நாளில் முடிக்காமலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது குறித்து அமைச்சர் ஆவேசம் அடைந்தார். எனவே பணிகளை விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் அனைத்து துறையிலும் ஆய்வு மேற்கொண்டு பணிகள் மேற்கொள்வதற்கான அறிவுரைகளை அமைச்சர் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள்(விருதுநகர்) க.பாண்டியராஜன், பொன்னுப்பாண்டியன்(ஸ்ரீவில்லிபுத்தூர்), மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் கி.கலாநிதி, முத்துச்செல்வி, கோட்டாட்சியர்கள்(அருப்புக்கோட்டை) உதயகுமார், கீர்த்தி பிரியதர்ஷினி(சிவகாசி), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.