தமிழகத்தில் நடப்பாண்டில் (2014-15) புதிதாக 15 தாலுகாக்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன் மூலம், தாலுகாக்களின் எண்ணிக்கை 269 ஆக உயரும் எனவும் அவர் அறிவிப்புச் செய்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், தாமதமின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் புதிய கோட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 15 புதிய தாலுகாக்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர்-பூந்தமல்லி தாலுகாக்களை சீரமைத்து ஆவடியில் புதிய தாலுகா; காஞ்சிபுரம் தாலுகாவைப் பிரித்து வாலாஜாபாத்தில் புதிய தாலுகா; விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைப் பிரித்து மரக்காணத்தில் புதிய தாலுகா; கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தைப் பிரித்து புவனகிரியில் புதிய தாலுகா; சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் தாலுகாவைப் பிரித்து பெத்தநாயக்கன் பாளையத்தில் புதிய தாலுகா உள்ளிட்ட 15 தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இப்போது 254 தாலுகாக்கள் உள்ளன. அவற்றுடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 15 தாலுகாக்களைச் சேர்த்தால் அவற்றின் எண்ணிக்கை 269 ஆக உயரும் என்று அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.