முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி வருகைக்கு பின்னர் சபரிமலை தேசிய புனித ஸ்தலமாக அறிவிக்கப்படும்: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம்

கடந்த 2010-ம் ஆண்டு சபரிமலை புல்மேட்டு பாதையில் நெரிசலில் சிக்கி 104 பேர் இறந்தனர். எங்களது சமாஜத்தின் போராட்டத்தின் பிறகு 104 பேருக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:

சபரிமலைக்கு ஜன.20-ம் தேதிக்குள் பிரதமர் நரேந்திரமோடி வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார். அவர் வருகைக்கு பிறகு சபரிமலை மத்திய

அரசு தேசிய புனித ஸ்தலமாக அறிவிக்கப்படவுள்ளது என சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ அகில இந்திய பொதுச்செயலாளர் ஈரோடு என்.ராஜன் தெரிவித்தார். சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2010-ம் ஆண்டு சபரிமலை புல்மேட்டு பாதையில் நெரிசலில் சிக்கி 104 பேர் இறந்தனர். எங்களது சமாஜத்தின் போராட்டத்தின் பிறகு 104 பேருக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. எங்களது சமாஜத்திற்கு மொத்தம் 863 கிளைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 234 கிளைகள் உள்ளன. கேரள அரசும், தேவசம்போர்டும் சபரிமலை பக்தர்களுக்கு போதிய வசதியை செய்து தரவில்லை. நாங்கள் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறோம். மருத்துவசேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். சபரிமலைக்கு கூட்டம் வருவதை குறைக்க அரசியல் ரீதியாக அங்குள்ள ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது. தேவசம்போர்டில் உள்ள உறுப்பினர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதால், பக்தர்களுக்கு எவ்வித வசதியும் செய்யாமல் வியாபார நோக்கில் செயல்படுகின்றனர். அடுத்த ஆண்டு முதல் கியூ வரிசையில் நீண்ட நேரம் நிற்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சப்பாத்தி உணவு வழங்கவுள்ளோம்.

சிதம்பரத்தில் ஐயப்பன் படத்துடன் ஐயப்ப குருமார்கள் ஊர்வலம் செல்ல டிஎஸ்பி தடை விதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் ஐயப்பன் ஊர்வலம் நடத்த தடை விதித்துள்ளது வருத்தமாக உள்ளது. சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் அகில இந்திய தலைவர் கிஷோர்குமார் வாரியார் புதுதில்லி சென்று வலியுறுத்தியதின் பேரில் பிரதமர் மோடி ஜன.20-தேதிக்குள் சபரிமலைக்கு வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

இமயமலையில் உள்ள வைஷ்ணவதேவி கோயில் தேசிய புனதி ஸ்தலமாக அறிவித்து மத்தியஅரசு பல்வேறு வசதிகளை மேற்கொண்டுள்ளது. அதுபோல சபரிமலையையும் மத்தியஅரசு தேசிய புனதி ஸ்தலமாக அறிவிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் வருகைக்கு பின்னர் அந்த அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது என ஈரோடு என்.ராஜன் தெரிவித்தார்.

பேட்டியின் போது சேவா சமாஜம் மாநிலதுணைத் தலைவர் ஆடிட்டர் கே.நடராஜபிரபு, மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.சிவராமன், மத்திய நிர்வாக செயலாளர் எம்.எஸ்.எஸ்.மணியன், சி.டி.அப்பாவு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.