சிதம்பரம் பேராசிரியர் வீடு மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவர் கைது
இடம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடைபெற்ற வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவரை நகர போலீஸார்
இடம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடைபெற்ற வழக்கில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மூவரை நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரம் கனகசபைநகர் 2வது மெயின்ரோட்டில் வசிப்பவர் பூ.ராஜமன்னன் (52). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல இயற்பியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூ.ராஜமன்னன் வீட்டிற்கு சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கும்பல் வீட்டு வாயிலில் இருந்த நாற்காலி, பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தனர். பின்னர் உருட்டுக்கட்டையால்
ஜன்னல் கதவுகள் மற்றும் பொருள்களை உடைத்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ஆடி காரை கல்லை தூக்கி போட்டும், உருட்டை கட்டையால் தாக்கி உடைத்து சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இது தொடர்பாக அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், கணேசன், சந்திரமோகன், ராஜா, பஞ்சர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் பஞ்சர் பன்னீர்செல்வம், (59), மனோகர் (48), பாலிஷ் நடராஜன் (42) ஆகிய மூன்று பேரை கைது தெய்தனர்.
எதிர்தரப்பினர் மீது வழக்குப்பதிவு, 2 பேர் கைது: அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் வீட்டை பதிலுக்கு தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்குரோட்டு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (22), கங்கவடங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேல்(26), அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், அன்புமணி, செந்தில்நாதன் ஆகியோர் 5 பேர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு காளிமுத்து, பழனிவேல் ஆகிய இருவரை நகர போலீஸார் கைது செய்தனர்.