ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தீக்குளிக்க முயற்சி
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, சங்கரன்கோவில்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, சங்கரன்கோவில் வட்டம், பாலஅருணாசலபுரத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் கல் தொழிலாளர் சேவை தொழிற்கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வந்தனர். அவர்களில் விஜயகுமார் (30), பைரவசாமி (30), தர்மராஜ் (30), மாரியம்மாள் (35), தமிழரசி (40) உள்பட 13 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், மனு அளிப்பதற்காக ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சங்கரன்கோவில் வட்டம், அரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கோணமலை கல் குவாரியில் பாலஅருணாசலபுரம், வலசை கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற்று வந்தோம். இந்நிலையில், புதிதாக குத்தகைக்கு விடுவதில் தாமதம் நிலவிவருவதால் வேலையின்றி தவித்து வருகிறோம். பலர் வெளியூர்களுக்கு சென்று பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, கோணமலை கல் குவாரியை உடனடியாக குத்தகைக்கு விட வேண்டும். தனிநபர் யாருக்கும் குத்தகைக்கு வழங்கக்கூடாது. கூட்டுறவுச் சங்கத்திற்கு குத்தகைக்குக் கொடுக்க வேண்டும் இல்லையெனில் அரசே ஏற்று நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனுவுக்கு ஆட்சியர் சாதகமான பதிலைக்கூறவில்லையெனக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், கோணமலை கல்குவாரியை புதிதாக குத்தகைக்கு விடுவதில் சிக்கல் உள்ளதாகவும், மலைக்குழும பாதுகாப்பின் கீழ் கோணமலை பகுதி வந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின்பு நாங்கள் முறையிட்டதின் பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மழைக்குழும பாதுகாப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதன்பின்பு ஏற்கெனவே இருந்ததைப்போல கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் குத்தகைக்கு விடாமல் தனிநபருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளனர் இதனை ஏற்க மாட்டோம் என்றனர்.
வெகுநேரமாக அவர்கள் கலைந்து செல்லாததால், போலீஸார் அவர்களை வேனில் ஏற்றி பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.