காங். உடன் திமுக, தேமுதிக கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது: சுதர்சன நாச்சியப்பன்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கும் என்பதால் காங்கிரஸ் கட்சியுடன் திமுக, தேமுதிக கட்சிகள் கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளதாக மத்திய தொழில் மற்றும்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறை ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கும் என்பதால் காங்கிரஸ் கட்சியுடன் திமுக, தேமுதிக கட்சிகள் கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.சிவகங்கையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 6 மாநிலங்களில் மட்டும் தான் கூட்டணி உள்ளது. தெலுங்கானா உள்பட 23 மாநிலங்களில் காங். மட்டும் தனித்து போட்டியிடும் நிலையில் வலுவாக உள்ளது. 6 மாநிலங்களில் முக்கியமாக மகாராஷ்டிராவில் என்.சி.பி. கட்சியுடன் பேச்சு வார்த்தை முடிந்து போட்டியிடும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் லாலு பிரசாத் யாதவுடன் பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் தேசிய முன்னணியுடனான பேச்சு வார்த்தையில் ராகுல்காந்தி தலையிட்டு கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அரசு பொதுத் தேர்வு முடிந்த பின்னர் தான் இங்கு தேர்தல் நடத்தப்படும். இதனால் தமிழகத்தில் ஏப்.15ஆம் தேதிக்குப் பின்னர் தான் தேர்தல் பணி இங்கு துவங்கும். மே மாதம் 10ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்புள்ளது. அந்த காலக்கட்டத்தில் அன்றைய சூழலுக்கு ஏற்ப இன்றைக்கு பிரிந்திருக்கும் கட்சிகளுடன் காங். ஒன்றிணைந்து ஓரணியில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற சூழல் ஏற்படும் போது தான் ஒரு கூட்டணி என்பது முழுமையான நிலைக்கு வரும்.
Advertisement
திமுகவைப் பொறுத்தவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் தேர்தலில் இருமுறை இணைந்துள்ளனர். இதற்குப் பின் தானாகவே திமுக வெளியேறியது. ராஜ்யசபா வேட்பாளருக்கு திமுக ஆதரவு கேட்டது. திமுக தனக்குள்ள நிர்பந்தம் காரணாக சில அறிக்கைகளை கொடுத்துள்ளனர். இதை காங். எதிர்ப்பாகவும் நினைக்கவில்லை, கூட்டணி முடிந்து விட்டதாகவும் நினைக்கவில்லை. அதே போல் விஜயகாந்த்துடனான நட்பு என்பது நீண்டகாலமாக உள்ளது. ராஜ்யசபாவுக்கான தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு கொடுக்க கேட்ட போது எங்களால் கொடுக்க முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவு கொடுத்தோம். இதை கோபமாக விஜய்காந்த் எடுத்துக் கொண்டு காங்கிரசுக்கு எதிராக செயல்படவில்லை என்பதனால் தேமுதிகவுடனான நட்பும் தொடர்கிறது.
சத்தியமூர்த்தி பவன் மீதான தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலைக்காக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரிசெய்யாமல் அரசு விட்டுவிட்டால் அது எந்த கால கட்டத்திலும் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதே பாதிப்பு திமுகவுக்கு ஏற்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் சீமான் போன்ற நபர்களை சட்டம் ஒழுங்கு பாதிப்பு நடவடிக்கையில் அனுமதித்தனர். இறுதியில் அவரை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது வெளியில் இருந்த ஆட்கள் வந்து ஒருவருக்கொருவர் மோதி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இது போன்ற சூழ்நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்க மாட்டார் என நம்புகிறேன. மத்தியில் மீண்டும் காங்.ஆட்சிக்கு வரும் ராகுல் காந்தி பிரதமராவார். ஏனெனில் 9 மாநிலங்களில் மட்டும் தான் காங். பி.ஜே.பி. உடன் நேரடி போட்டியில் உள்ளது. வாஜ்பாய் காலத்தில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் மீதமுள்ள 9 மாநிலங்களில் மாநில கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார்.
அதன் மூலம் 100 இடங்கள் அதிகமாக கிடைத்தது. இப்போது இதற்கான முயற்சியிலே பாஜக தோற்றுவிட்டது. மீதமுள்ள 10 மாநிலங்களில் காங்கிரசும், மாநில கட்சிகளும் தான் நேரடி போட்டியில் உள்ளது. எனவே காங்.பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி துணையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.