நெல்லை: குடிநீர் கேட்டு குடங்களுடன் பெண்கள் திடீர் ரயில் மறியல், ரயில் நிறுத்தம்
திருநெல்வேலியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டதால் சென்னை செல்லும் குருவாயூர் ரயில் செவ்வாய்க்கிழமை நடுவழியில்
திருநெல்வேலியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்டதால் சென்னை செல்லும் குருவாயூர் ரயில் செவ்வாய்க்கிழமை நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ரயில்வே குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ரயில்வேயில் பணி செய்யும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். தெற்கு ரயில்வே மூலம் குடிநீர் இந்த குடியிருப்புக்கு தினமும் 2 நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.மின்தடை காரணமாக தினமும் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கடந்த சில தினங்களாக இக்குடியிருப்பு பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லையாம். குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
எனினும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனிடையே அப்பகுதியில் வசிக்கும் ரயில்வே தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை காலையில் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் திருநெல்வேலி சந்திப்பு நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
தகவலறிந்த சந்திப்பு ரயில்வே காவல் ஆய்வாளர் அருள்பிரகாஷ், சந்திப்பு காவல் ஆய்வாளர் பெரியசாமி, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்றது. மாநகராட்சி துணை மேயர் பூ. ஜெகநாதன் நடவடிக்கையால் ரயில்வே குடியிருப்புக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.