சிதம்பரம் புலிமடுவில் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு கண்டெடுப்பு!
சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரத்தில் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (1216-1242) கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் கோப்பெருஞ்சிங்கன் மன்னன், ஸ்ரீநடராஜர் மற்றும் காளியம்மனுக்காக
சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரத்தில் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (1216-1242) கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் கோப்பெருஞ்சிங்கன் மன்னன், ஸ்ரீநடராஜர் மற்றும் காளியம்மனுக்காக எண்ணற்ற தான, தர்மங்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளன.
சிதம்பரம் அருகே விபீஷணபுரத்தில் புலமடு (புலிமேடு) என்ற இடம் உள்ளது. புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் தவம் செய்த பகுதி என்பதால், அந்த இடத்திற்கு புலிமேடு என பெயர் பெற்றதாக நடராஜர் கோயில் தலபுராணத்தில் கூறப்படுகிறது. இதனருகில் புலிக்கால் முனிவருக்கான ஸ்ரீமத்யந்நீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கல்வெட்டு ஒன்று எல்லை தடுப்புக்கலாக உள்ளது என விபீஷ்ணபுரம் சக்திநகரில் உள்ள தர்காவின் மூத்தவல்லி பஷீர் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துணைப் பேராசிரியர்களான இல.கணபதி முருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் சென்று கல்வெட்டை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு குறித்து இல.கணபதிமுருகன் தெரிவித்தது: ஸ்வஸ்தி ஸ்ரீசகல புவன சக்கரவர்த்திகள் கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு எனத் தொடங்கும் இக்கல்வெட்டானது முகய அல்லது முதய நாயனார்க்கு பள்ளித்தாமமாக (நந்தவனத்திற்கு) நிலம் வழங்கிய செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. நாயனார் என்ற பெயர் காணப்படுகிறது. நாயனார் என்ற சொல்லானது கல்வெட்டுகளில் இறைவன், அரசன், அடியவர் ஆகியோரை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் ஆகும். கல்வெட்டு குறிக்கும் கோப்பெருஞ்சிங்கதேவன் சேந்தமங்கலத்தை தலைநகரமாக கொண்டு ஆண்ட காடவர் குல குறுநில மன்னன் ஆவான்.
முதலாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு சகல புவன சக்கரவர்த்தி என்ற பட்டப் பெயர்: வரலாற்றில் காடவர் குல சிற்றரசர்களுள் கோப்பெருஞ்சிங்கன் என்ற பெயர் இருவருக்குள்ளதாக தெரிய வருகிறது. முதலாம் கோப்பெருஞ்சிங்கனுக்கே சகல புவன சக்கரவரத்தி என்ற பட்டப்பெயர் இருந்துள்ளது. கல்வெட்டில் குறிக்கப்படும் கோப்பெருஞ்சிங்கன், முதலாம் கோப்பெருஞ்சிங்கனே என்பதை சகல புவன சக்கரவர்த்தி என்ற சொல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நந்தவனம் அமைக்க தானமாக வழங்கப்பட்ட நிலம்:
கல்வெட்டில் பள்ளித்தாமம் என்ற வகையில் நிலம் தானமாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளித்தாமம் என்பது இறைவன் வழிபாட்டிற்காக நந்தவனம் அமைக்க வழங்கப்பட்ட நிலமாகும். நந்தவனத்தை பயிர் செய்து காப்பவருக்கும், மலர் பறித்து வருபவருக்கும், மாலை தொடுப்பவருக்கும் கொடுக்கப்பட்ட வரியில்லா (இறையிலி) நிலம் ஆகும்.
முதயநாயனார்:
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முதய நாயனார் என்பவர் திருக்கோயில் இறைவனையோ அல்லது இறைத்தொண்டில் ஈடுபட்ட அடியவரையோ குறிக்கிறது. கல்வெட்டில் திருப்பூ மண்டம் என்ற சொல்லும் வருகிறது. இது புலிக்கால் முனிவர் கோயில் இருக்கும் இடத்திற்கு பின்புறம் இருந்த மண்டபமாகும். தற்போது முற்றிலும் அழிந்து எஞ்சிய சிலபகுதிகள் புலிமேடு தீர்த்தகுளத்திற்குள் புதையுண்டு கிடக்கின்றன.
காந்திஜி அஸ்தி கரைத்த இடம்:
இந்த புலமேடு மற்றொரு சம்பவத்தையும் தன்னுள் கொண்ட பெருமையுடையதாக கூறப்படுகிறது. தேசபிதா காந்திஜி மறைந்த போது, அவரது அஸ்தி இங்கு கரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இல.கணபதி முருகன்.