சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆனித் திருமஞ்சன தரிசனம் நாளை!
பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். வெள்ளிக் கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது.
வீதிவலம் வந்த 5 தேர்கள்:
ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூன்.25 தேதி கொடியேற்றத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் மாலை கீழ வீதி தேர் நிலையை அடைந்தன.
உழவாரப் பணி மற்றும் திருமுறை இன்னிசை:
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.
மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி:
மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிப்பது வழக்கமாக உள்ளது. இதனை முன்னிட்டு முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் அறங்காவலர்குழுத் தலைவர் என்.ராமலிங்கம் தலைமையில் தொன்று தொட்டும் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் இரவு ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெறறது.
வெள்ளியன்று ஆனித் திருமஞ்சன தரிசனம்:
ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதர், துணைச்செயலாளர் என்.எஸ்.மணி தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் எஸ்.ரத்தினசபாபதி தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் செய்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தேரோடும் வீதிகளில் அங்கப் பிரதட்சணம்:
ஆனித் திருமஞ்சன தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் தேரோடும் வீதிகளில் தேரோட்டம் முன்பு சித்தர் ஸ்ரீசந்துரு சுவாமிகளின் தொடர் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஆடிட்டர் கே.நடராஜபிரபு, ராஜேஸ்வரி நடராஜபிரபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஸ்ரீசந்துரு சுவாமிகள் மத நல்லிணக்கம், மனித ஒற்றுமையை வலியுறுத்தி ஸ்ரீநடராஜர் கோயில் உள்பிரகாரம், வெளிப் பிரகாரம் மற்றும் தேரோடும் வீதிகளில் 2840 நாட்களை கடந்து தொடர் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.