முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா! யானை மேல் வைத்து திருமுறைகள் ஊர்வலம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமபுரம் ஆதினம் சார்பில்  பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா மற்றும் திருமுறைகளை யானைகள் மீது வைத்து ஊர்வலம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமபுரம் ஆதினம் சார்பில்  பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழா மற்றும் திருமுறைகளை யானைகள் மீது வைத்து ஊர்வலம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஊர்வலத்தில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர்.

சிதம்பரத்தில் சோழ மன்னன் அபநய சோழன் வேண்டுகோளுக்கிணங்க, சேக்கிழார் பெருமான், நடராஜப் பெருமானை வேண்டி உலகெல்லாம் என்ற அசரிரீ சொல்லை முதல் சொல்லாக கொண்டு திருத்தொண்டர் புராணம் என்கிற பெரியபுராணத்தை இயற்றினார். அவர் இயற்றிய பெரியபுராணத்தை, அபநய சோழன் சிதம்பரம் வீதிகளில், சேக்கிழாரையும், பெரியபுராணத்தையும் யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்து நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அரங்கேற்றம் செய்தார்.

யானை மேல் வைத்து திருமுறைகள் ஊர்வலம்: அபநய சோழன் செய்தது போல் தற்போது தருமபுரம் ஆதீனம் சார்பில் முதல் முறையாக பன்னிரு திருமுறைகள் 12-க்கும் உரை வெளியிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சிதம்பரம் தேரோடும் வீதிகளில் மூன்று யானைகள் மேல் வைத்து, தாரை, தம்பட்டை, மேள தாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கீழசன்னதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு 4 வீதிகள் வழியாக வலம்வந்து கிழக்கு கோபுர வாயில் வழியாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை அடைந்தது. ஊர்வலத்தில் சேக்கிழார் அறக்கட்டளை சார்பில் 63 நாயன்மார்கள் வேடமணிந்து பள்ளி மாணவ. மாணவியர்கள் வீதிவலம் வந்தனர். முன்னதாக காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் சன்னதியில் தருமை ஆதீனம் ஸ்ரீசண்முகதேசி ஞானசம்பந்தர் திருமுறை நூல்களை வைத்து வழிபாடு செய்து, தம்பிரான்கள் புடைசூழ சிதம்பரம் நகருக்கு வந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமான வழிபட்டு திருமுறை நூல்களை பொற்பாதங்களில் அர்ப்பணம் செய்தார்.

ஊர்வலத்தில் மடாதிபதிகள்:

ஊர்வலத்தில் ஞானரதத்தில் தருமை ஆதீனம் ஸ்ரீசண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீகாசி மடம் ஸ்ரீமுத்துக்குமாரசாமித் தம்பிரான் ஆகியோர் ஊர்வலத்தில் வலம் வந்தனர். மேலும் ஊர்வலத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீஅம்பலவாண தேசிய பரமாச்சாரியார், திருச்சி மெளன மடம் கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான், சிதம்பரம் ஸ்ரீமெளன மடாதிபதி ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள், வடலூர் ஊரன் அடிகளார் மற்றும் விழாவிக்குழுவினர் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துக்குமரன், ஆர்.எம்.சுவேதகுமார், கு.சேதுசுப்பிரமணியன், எஸ்.ஆர்.ராமநாதன், தோப்பு கே.சுந்தர், டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி, இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், ஜோதிகுருவாயூரப்பன், முத்துகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பன்னிரு திருமுறை உரை அரங்கேற்றம்:

சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பன்னிரு திருமுறை உரை வெளியீடு அரங்கேற்ற விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் 'பன்னிரு திருமுறைகள் உரையுடன் 16 பாகங்கள் கொண்ட நூல்கள்',  'திருக்குறள் உரை வளம்', 'சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கு' ஆகிய நூல்கள் வெளியிடப்ப்படன. நூல்கள் அரங்கேற்ற விழாவிற்கு பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர் தலைமை வகித்தார். திருச்சி ஸ்ரீமெளன மடம் கட்டளை தம்பிரான் ஸ்ரீகுமாரசாமி தம்பிரான் வரவேற்றார். மலேசியா டத்தின் மல்லிகாநடராஜா, நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர், சிவகாமி திருநாவுக்கரசு, ராதா முத்துக்குமார், சிவானந்தவல்லி சுவேதகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

பன்னிரு திருமுறை உரை மற்றும் நூல்கள் வெளியீடு: நூல்கள்தருமை ஆதீனம் ஸ்ரீசன்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பன்னிரு திருமுறை உரைகளை வெளியிட்டு ஆசி வழங்கினார். திருவாவடுதுறை ஆதீனழம் ஸ்ரீஅம்பலவாண தேசிக சுவாமிகள் 14 சாஸ்திரங்களை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். ஸ்ரீகாசி மட அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமித் தம்பிரான் முக்தி நிச்சயமந் நூலை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா 14 சாஸ்திரங்களை பெற்று வாழ்த்துரையாற்றினார். மலேசியா மகாமாரியப்பன்கோவில் தலைவர் டத்தோ ஆர்.நடராஜா திருக்குறள் உரைவளம் நூலை வெளியிட்டு பேசினார். வடலூர் ஊரன் அடிகளார் வாழ்த்துரையாற்றினார். பன்னிரு திருமுறை உரைகள் வெளியீட்டு அரங்கேற்ற விழாவில் திரளான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

ஜூலை 7,8 தேதிகளில் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பன்னிரு திருமுறைகள் பற்றிய 4 அமர்வுகள் கொண்ட ஆய்வரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகின்றன. ஜூலை 8-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவுவிழா நடைபெறுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.