புத்தகங்கள் மனித வடிவத்தின் அச்சாக திகழ்கிறது: உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா
புத்தகங்கள் மனித வடிவத்தின் அச்சு வடிவமாக திகழ்கிறது என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா தெரிவித்தார்.
புத்தகங்கள் மனித வடிவத்தின் அச்சு வடிவமாக திகழ்கிறது என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா தெரிவித்தார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தருமை ஆதீனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்ற விழாவில் பங்கேற்று அவர் பேசியது: குருவருள், திருவருள் வேண்டும் என்றால் நல்ல நூல்கள் குருவருளாக இருந்து வழிகாட்டும், குருவருள் இருந்தால், திருவருள் தானாக வந்து சேரும். இந்த குருவருள் மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தருமை ஆதீனம் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளதற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அர்ப்பணிப்பு நோக்கோடு இந்த நூல்களை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும். புத்தகங்கள் இல்லையெனில் வரலாறு மெளனியாகிவிடும், இலக்கியங்கள் ஊமையாகிவிடும், நாகரீகம் வளர்ச்சியடைந்திருக்காது.
சமய இலக்கியங்கள் சட்டம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது. சட்டம் தவறு செய்யாதே என்றும், தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என கூறுகிறது. ஆனால் சமய இலக்கியங்கள் அன்பாக இரு என அன்பையும், அறத்தையும் போதிக்கிறது. அழிக்கும் கரங்கள், அடிக்கும் கரங்கள் தேவையில்லை, அனைக்கு கரங்கள்தான் தேவை என இலக்கியங்கள் கூறுகிறது. சமய இலக்கியங்கள் இல்லாத காலங்களில் போர்கள் நடந்துள்ளது. கோயிலை கட்டிக் கொடுத்து, சமய நம்பிக்கையை ஊட்டி வளர்த்து, அன்பையும், அறத்தையும் ஊட்டி வளர்த்தால் நீதிமன்றங்களே தேவையில்லை, வழக்குரைஞர்களும் தேவையில்லை.
கோகுல் உலக வரைபடத்தில் சிதம்பரத்தை பற்றி தற்போது கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் உலக பூமத்தியரேகை மையப்பகுதியில் உள்ளது என்றும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமான சிதம்பரம், காற்று ஸ்தலமான காளகஸ்தி, நிலம் ஸ்தலமான காஞ்சிபுரம் ஆகியவை ஒரே நேர் கோட்டில் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சாதனையின் உச்சக்கட்டம் இந்த கோயில். எனவே இக்கோயில் குறித்த உலக மக்கள் அறியும் வகையில், அதன் சிறப்புகளை பற்றி பதாகைகள் வைக்க வேண்டும் என நீதிபதி எஸ்.விமலா தெரிவித்தார்.