முகப்பு
தற்போதைய செய்திகள்

வடக்குமாங்குடி கிராமத்தில் விசாரணை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்

சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று இருதரப்பினரிடம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:49 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று இருதரப்பினரிடம் விசாரணை நடத்தி குறைகளை கேட்டறிந்தார்.

சிதம்பரம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் தேர்தல் முன்விரோதத்தில் தேர்தல் முடிவுற்ற கடந்த ஏப்.24-ம் தேதி தலித் மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் இருவர் இறந்தனர். 4 பேர் காயமுற்றனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து 50 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை இருந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த இரு தலித் இளைஞர்கள் விக்னேஷ், சஞ்சய்காந்தி ஆகிய இருவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வடக்குமாங்குடி கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை சேர்ந்தவர்கள் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் காலனி பகுதிக்கு சென்று அங்குள்ள தலித் மக்களிடம் ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் போதிய பாதுகாப்பு மற்றும் வசதி இல்லாததால் தாங்கள் வசிக்க வேறு இடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். எத்தனை குடும்பத்தினர் இருக்கின்றீர்கள் என்ற பட்டியலை தருமாறு ஆட்சியர் தெரிவித்து, தலித் மக்களுக்காக அப்பகுதியில் புதிய ரேஷன் கடை, மயானத்திற்கு சாலை உள்ளிட்ட வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் என்றும், வசிக்க வேறு இடம் அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலித் மக்களிடம் தெரிவித்தார்.

அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் மாவட்ட செயலாளர் வ.க.செல்லப்பன், நிர்வாகிகள் பால.அறவாழி, குறிஞ்சிவளவன் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் தலித் மக்கள் பாதுகாப்பாக வசிக்க வேறு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியருடன் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.