தினமணி செய்தி எதிரொலி: விருதுநகர் பூங்கா திறப்பு
விருதுநகர் நகராட்சியின் 16-வது வார்டு அகமது நகர் மற்றும் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் எதிரே லட்சுமி காலனி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
தினமணி செய்தி எதிரொலியாக விருதுநகர் அகமது நகரில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்காவை உபயோகத்திற்காக சட்டப் பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
விருதுநகர் நகராட்சியின் 16-வது வார்டு அகமது நகர் மற்றும் அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் எதிரே லட்சுமி காலனி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியின் மூலம் தலா ரூ.3 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. இதில், குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கி விளையாடுதல், ஏற்ற இறக்கம் விளையாடு தளம் ஆகியவைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதமாக சிறுவர், சிறுமிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்படாமல் இருப்பது தொடர்பாக கடந்த ஜூன்-27ம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Advertisement
அதன் துரித நடவடிக்கையாக இந்த சிறுவர் பூங்காவை பள்ளிக்கூட சிறுவர், சிறுமிகளின் உபயோகத்திற்காக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதில், விருதுநகர் நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி, சட்டப்பேரவை தொகுதி துணைச் செயலாளர் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் எஸ்.மாரியப்பன், நகரச் செயலாளர் மற்றும் நகராட்சி உறுப்பினருமான முகமது நெய்னார், வார்டு உறுப்பினர்கள் மகேந்திரன், பொன்னுச்சாமி மற்றும் முத்துராமன் உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.