நெல்லையில் இருந்து விழுப்புரம், விருதுநகருக்கு கொண்டு செல்லப்பட்ட 882 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு மொத்தம் 882 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு மொத்தம் 882 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள வேளாண் இடுபொருள் கிட்டங்கி வளாகத்தில் உள்ள அறையில் சுமார் 5 ஆயிரத்து 190 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு 232 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.சண்முகம் தலைமையில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ராமையன்பட்டிக்கு வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து பெற்றனர். பின்னர் அவை லாரியில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. மாலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு 650 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் பால்துரை கூறுகையில், ராமையன்பட்டியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேவையான அளவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 2 மாவட்டங்களுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.