பயன்படாத ஆழ்துளைக் கிணறை அடைக்க புதிய கருவி: கலசலிங்கம் மாணவர்கள் சாதனை
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறை அடைக்க பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறை அடைக்க பயன்படுத்தும் கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இயந்திரவியல் படிக்கும் மாணவர்கள் எம்.விக்னேஷ், எஸ்.முத்துராம், பி.முருகன், வேணுகோபாலன் ஆகியோர் பேராசிரியர்கள் என்.ரஜினி, என்.வி.நீலகண்ட நம்பூதிரி, சிவசுப்பிரமணியன் ஆகியோரின் ஆலோசனையின்படி பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அடைக்க புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்தான் மூடப்படாத ஆழ்துளைக் கிணறு விபத்து அதிகமாக நடைபெறுகிறது. இதில் சிறு குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த விபத்தைத் தடுக்க கற்களையும், இரும்பு மூடியையும் கொண்டு ஆழ்துளைக் கிணறுகளை அடைத்து வைக்கிறார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வு இல்லை. இதனை எளிதாக அகற்றி விடலாம். ஆழ்துளைக் கிணறு விபத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த கலசலிங்கம் மாணவர்கள் இந்தக் கருவியை உருவாக்கியுள்ளார்கள்.
இந்தக் கருவியில் சாவி, சக்கரம், பினியன் (pinion), ரேக், சாப்ட் உள்ளிட்ட பாகங்கள் உள்ளன.
இந்தக் கருவியை உபயோகப்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றின் மேல் வைத்து சாவியைக் கொண்டு கடிகார திசையில் சுற்றும்போது, இதனுடன் இணைந்துள்ள சாப்படும் சேர்ந்து சுற்றும். இந்த சாப்டில் இணைத்துள்ள பினியனும் கூட சேர்ந்து சுற்றுவதன் மூலம் இதனுடைய இரண்டு பகுதியில் உள்ள கூர்மையான ரேக் எதிர் திசையில் நகர்ந்து மண்ணுக்குள் குத்தி இறங்கிவிடும்.
ஆதலால் இந்தக் கருவியை ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து அகற்ற இயலாது. இந்தக் கருவியை வைத்து ஆழ்துளைக் கிணற்றை அடைத்த பின்னர், ஆழ்துளைக் கிணற்றிலிருந்து அகற்ற முடியாது. இது திடமான பாதுகாப்பு. சாவியை அகற்றி விடலாம்.
எப்போது நமக்கு ஆழ்துளைக் கிணற்றை திறக்க வேண்டுமோ, அப்போது சாவியை வைத்து சாப்டை எதிர்கடிகார திசையில் சுற்றி இந்தக் கருவியை அகற்ற முடியும். அடிக்கடி ரேக் மற்றும் பினியன் பாதையில் எண்ணெய் மற்றும் கிரீஸ் போடுவது நல்லது. மிகக் குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவியின் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் ஆபத்தை முழுமையாக தடுக்கலாம் என்று மாணவர்கள் கூறினர். மேலும் இந்த வடிவமைப்பு காப்புரிமைக் கழகத்திற்கு, காப்புரிமை பெறுவதற்காக அனுப்பப்பட்டு்ள்ளதாய் மாணவர்கள் கூறினர்.
சாதனை மாணவர்களையும், இதற்கு் உறுதுணையாக இருந்த பேராசிரியர்களையும் வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.