பழனியருகே அணை திறப்பால் கிராமம் தீவாக மாறி போக்குவரத்து துண்டிப்பு
பழனியை அடுத்தது பாலாறு பொருந்தலாறு அணைக்கட்டு. மாவட்டத்தின் பெரிய அணைக்கட்டான இங்கு சமீபத்தில் பெய்த மழையால் மேற்குமலைத் தொடர்ச்சியில் இருந்து அதிக அளவு நீர்வரத்து
பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை திறப்பால் பொருந்தல் கிராமம் தீவு போல மாறி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பழனியை அடுத்தது பாலாறு பொருந்தலாறு அணைக்கட்டு. மாவட்டத்தின் பெரிய அணைக்கட்டான இங்கு சமீபத்தில் பெய்த மழையால் மேற்குமலைத் தொடர்ச்சியில் இருந்து அதிக அளவு நீர்வரத்து துவங்கியுள்ளது. தற்போது அணையின் கொள்ளளவு முழுக்க எட்டி வரும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி பாலாறு மற்றும் பொருந்தலாறு என இரு ஷட்டர்களிலும் குறைந்த அளவு தண்ணீர் குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாலாற்றை அடுத்த பாலம் மற்றும் ஜீரோ பாயிண்ட்டை அடுத்த பாலத்தில் வெள்ளமாக சீறிப்பாய்கிறது. இந்த இரண்டு பாலமும் தரைப்பாலமாகும். இந்த இரு பாலங்களுக்கும் இடையே உள்ளது பொருந்தல் கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பமும், மீன்பிடிக்கும் குடும்பங்களும் உள்ளது.
ஒவ்வொரு முறையும் இதுபோன்ற அணை திறப்பின் போது இந்த கிராமம் துண்டிக்கப்படுவது துயரமான நிகழ்வாகும். இதனால் இருபுறமும் வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் உள்ளூரிலேயே அச்சத்துடன் வாழவேண்டி உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், விவசாய கூலி வேலை செய்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை தண்ணீர் திறப்பால் பொருந்தல் கிராமமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, தற்போதுள்ள தரைப்பாலம் கடும் மழைகாலத்தில் முற்றிலும் சேதமாவதும், அதை நாங்களே சீரமைப்பதும் தொடர்கதையாக உள்ளது. இந்த சாலை பேரூராட்சிக்கு சொந்தமானதா, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதா என்றே தெரியவில்லை. இருவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றினால் மட்டுமே நாங்கள் வெளியே சென்று வர முடியும். தற்போது மழையால் நாங்கள் அணைக்கட்டின் மேலே உள்ள வழியாக மட்டுமே செல்ல முடியும். அதற்கும் பொதுப்பணித்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வேறுவழி இல்லாமல் திண்டாடி வருகின்றோம் என தெரிவித்தார். இந்நிலையில் இதே வழியில்தான் தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை சார்பில் மீன்பிடித்து விற்பனை செய்யும் மையமும் உள்ளது. தினமும் பிடிக்கப்படும் மீன்களை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்வதற்கும் இதனால் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீன்களை கீழே இறக்கி பின் மீண்டும் மேலே அணைக்கட்டின் மேல்பகுதிக்கு கொண்டு அங்கிருந்து மினிலாரிகள் மூலம் மீன்வளத்துறையினர் கொண்டு செல்கின்றனர். ஆகவே இந்த தரைப்பாலத்தை விரைவில் உயர்மட்ட பாலமாக மாற்ற பொருந்தல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.