ஆலங்குடி அருகே இரு வீடுகளில் 34 பவுன் திருட்டு
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(35).தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை
ஆலங்குடி அருகே பூட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகளில் 34 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(35).தனியார் நிறுவன ஊழியரான இவர் மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு திங்கள்கிழமை உறவினரின் திருமண விழாவிற்கு அறந்தாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் கணேசனின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து வீட்டிற்கு வந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதேபோல திருவரங்குளம் ஒன்றிய அலுவலகச் சாலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). டீகடை நடத்தி வருகிறார்.இவரும் இவரது மனைவி மீனாளும் திருவரங்குளம் கோயில் தேரடி வீதியில் உள்ள இவரது டீ கடையில் திங்கள்கிழமை இரவு தூங்கிவிட்டனராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.அப்போது பெட்டியில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சொக்கநாதன், காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
திருவரங்குளத்தில் ஒரே இரவில் சுமார் 300 மீட்டர் தொலைவிற்குள் இரண்டு வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.