முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டையில்  ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:11 AM
பகிர்:

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

மத்திய அரசு 6 ஆவது ஊதியக்குழுவில் உயர்த்தி வழங்கியுள்ள அனைத்துப் படிகளையும்  ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் தமிழக அரசு  உயர்த்தி வழங்க வேண்டும். தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேரப் பணிக் காலத்தில் பணிபுரிந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் 50 சதவிகித பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தி்ல் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப் பள்ளிகளை மூடும் நோக்கத்தைக் கைவிட்டு அனைத்துப் பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரத்தை ஜேக்டோ மாநில பொதுக்குழு உறுப்பினர் ப.மனோகரன் தொடங்கி வைத்தார். மாவட்டத் தொடர்பாளர்கள் தா.ஆ.சார்லஸ்நீல், செ.பால்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் க.இசக்கியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.சேதுராஜ், எஸ்.டி.சீனிவாசன், இரா.பாலசுப்பிரமணியன், மு.சத்தியநாராயணன், இ.கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக தமிழாசிரியர் கழகம் உள்பட பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →