முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அரசு உத்தரவை வாபஸ் பெறக்கோரி நெல்லை மாவட்ட பீடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பேரணி

மத்திய அரசின் உத்தரவுகளை வாபஸ் பெறக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் பேரணியாகச்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

மத்திய அரசின் உத்தரவுகளை வாபஸ் பெறக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் பேரணியாகச் சென்று  ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பீடி பண்டல்களின் லேபில்களில் 85 சதவிகிதம் எச்சரிக்கை வாசகம் இடம் பெற வேண்டும். பீடியை தயார் செய்த 2 மாதத்துக்குள் விற்பனை செய்ய வேண்டும். பீடியை சில்லரையாக விற்பனை செய்யக் கூடாது என உள்ளிட்ட உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட பீடி தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்பு பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பிருந்து பீடி தொழிலாளர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். பேரணிக்கு அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் எம்.ராஜாங்கம் தலைமை வகித்தார். மாநில பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ஆர்.மோகன், மாவட்ட துணை பொதுச் செயலர் பி.முத்துலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் எஸ்.சடையப்பன், கற்பகவள்ளி, சுப்புலட்சுமி, குருசாமி, பரமசிவன், பொன்னுச்சாமி, தேன்மொழி ஆறுமுகம் உள்பட  திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

பின்னர் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பீடி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.வேல்முருகன் தலைமை வகித்தார். ஏ.ரபேக்காள், ஏ.மகாவிஷ்ணு, ஏ.ஆரியமுல்லை, கே.மாரிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.சிரீராம், எம்.சுடலைராஜ், எஸ்.வெங்கட்ராமன் ஆகியோர் பேசினர். டி.சுடலைமணி முடித்து வைத்தார்.

இதுகுறித்து அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் எம்.ராஜாங்கம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பீடி தொழிலை நம்பி உள்ளனர். தினமும் ரூ.100 முதல் ரூ.150 வரை இதன் மூலம் வருவாய் பெற்று வருகிறார்கள். அதனால் கடும் வறட்சி காலங்களில் கூட கிராமப்புற பொருளாதாரம் ஓரளவுக்கு தாக்குப்பிடிக்கும் நிலையில் இருந்தது. மத்திய அரசின் இந்த நெருக்கடியான உத்தரவுகளால் பீடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். அப்போது கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்து, ஏழை பெண்கள் செய்வதறியாது தவிக்கும் நிலை உருவாகும். ஆகவே, மத்திய அரசு பீடி தொழில் மீதான தனது புதிய உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் வாபஸ் பெறும் வரை ஆலோசனைக் கூட்டங்களைக் கூட்டி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →