முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குளம் அருகே கால்வாயில் பாலம் அமைக்கக்கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 119 பேர் கைது

ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட முத்தம்மாள்புரத்தில் பாலம் கட்டக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 119

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:47 AM
பகிர்:

ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட முத்தம்மாள்புரத்தில் பாலம் கட்டக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 119 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆலங்குளம் வட்டத்தில் மடத்தூர், வெங்கலாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட முத்தம்மாள்புரத்தில் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்கள் தினமும் பண்டாரபுரத்தில் உள்ள கால்வாயை கடந்துதான் செல்ல வேண்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்த கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இந்த நேரத்தில் தண்ணீருக்குள் இறங்கிதான் கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்தப் பகுதியில் பாலம் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் நேரடியாகவும், மனுக்கள் மூலமும் பலமுறை முறையிட்டும் பலனில்லையாம். இதைக்கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக முத்தம்மாள்புரம் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

அதன்படி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் வை.தினகரன் தலைமையில், திருநெல்வேலி மாநகரச் செயலர் மூர்த்தி, இளைஞரணிச் செயலர் ஜி.அருள்ஜோதி உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை திரண்டனர். ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்று கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனர். அதற்கு அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸார் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 119 பேரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →