நெல்லை மாவட்டத்தில் 24,17,624 வாக்காளர்கள்: புதிய வாக்காளர்கள் 70,186 பேர் சேர்ப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியலை திங்கள்கிழமை ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்டார். அதன்படி 24 லட்சத்து 17 ஆயிரத்து 624
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியலை திங்கள்கிழமை ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்டார். அதன்படி 24 லட்சத்து 17 ஆயிரத்து 624 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிய வாக்காளராக 70,186 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 5,843 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி ஆட்சியர் மு. கருணாகரன், திங்கள்கிழமை காலை 10.35 மணிக்கு இம்மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜி. குழந்தைவேல் பெற்றுக் கொண்டார். வாக்காளர் பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் 2014 இல் அக்டோபர் 15 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, 1.1.2015 அன்று 18 வயது பூர்த்தி அடையும் அனைவரும் புதிய வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி அக். 15 முதல் நவ. 10 ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு புதிய வாக்காளர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய வாக்காளராக பதிவு செய்ய 75,870 பேர் விண்ணப்பம் அளித்தனர். இதில் தகுதியான 70,186 பேர் வாக்காளராக சேர்க்கப்பட்டனர். இறப்பு, இடமாற்றம் ஆன வாக்காளர்கள் 5,843 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி பட்டியலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 24 லட்சத்து 17 ஆயிரத்து 624 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 12,01,487, பெண்கள் 12,16,086, மற்றவர்கள் 51 பேர் ஆவர். இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் தொடர்ந்து தங்களை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜன. 25 இல் தேசிய வாக்காளர் தினத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என். சாமுவேல், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் எஸ். பால்துரை, மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மற்றும் அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் ரவிஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் பரமசிவன், திமுக சார்பில் மத்திய மாவட்ட துணைச் செயலர் கண்ணன், சங்கர், தேமுதிக சார்பில் இளைஞரணி நிர்வாகி பி. ஆனந்தமணி, ஜெயச்சந்திரன், இந்திய கம்யூ. கட்சியில் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.