புதுச்சேரியை போல காரைக்காலிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் குற்றம்சாட்டினார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட நிலையில், காரைக்காலிலும் அதே நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. நிலம் அபகரிப்பு, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, சூதாட்டம் போன்ற சம்பவங்கள் காரைக்காலில் பெருகிவிட்டன. முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டும் அவர் காரைக்காலில் பணியாற்றுவதில்லை. ஒட்டுமொத்த காவல்துறையினரும் காவல்துறைப் பணியை வியாபாரமாக செய்கின்றனர். இதனால் மக்கள் அடையும் துன்பம் ஏராளம். இதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ரங்கசாமியையே சேரும்.
புதுச்சேரியில் தற்போது ஊர்க்காவல்படையினர் (ஹோம்கார்டு) பணிக்கு ஆள் எடுக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 23 தொகுதிகளில் 247 ஆண்களும், மாகி ஒரு தொகுதிக்கு 14 ஆண்களும், யேனாம் ஒரு தொகுதிக்கு 17 ஆண்களும், காரைக்கால் 5 தொகுதிக்கு வெறும் 29 ஆண்கள் மட்டுமே எடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் தேவையை இது பூர்த்தி செய்யாதது மட்டுமல்ல, காரைக்காலை புதுச்சேரி அரசு புறக்கணித்திருப்பதாகவே காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
புதுவை மாநிலத்தில் ரேஷன் கடை மூலம் மக்களுக்கு அரிசி தரப்படவில்லை. அரிசிக்குப் பதிலாக பணமாக தரப்படுமென்பதும் முழுமையாக இல்லை. மாதம் 20 கிலோ அரிசி, கிலோ ஒன்று ரூ.7.50-க்கு தரப்பட்டுவந்தது. இது 3 கிலோவாக குறைக்கப்பட்டுவிட்டது. ஏழைகள் என்றாலே ரங்கசாமி அரசுக்கு ஏளனமாகிவிட்டது. பிரதமர் நரேந்திரமோடியைபோல ரங்கசாமியும் மேல்தட்டு மக்களுக்காகவே ஆட்சி செய்கிறார். காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைக்க நாராயணசாமி மத்தியில் அமைச்சராக இருந்தபோது ரூ.137 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் பெற்றார். இதனை செயலாக்கத்துக்கு கொண்டுவர புதுச்சேரி அரசு மத்திய அரசை இதுவரை நிர்பந்திக்கவில்லை.
காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பது நாராயணசாமி மத்திய அமைச்சராக இருக்கும்போதே அடிக்கல் நாட்டி, முதல்கட்ட நிதியும் ஓஎன்ஜிசியிடமிருந்து பெற்றுத்தந்தார். ஆனால் ரங்கசாமி அரசு அதை செயலாக்கத்துக்கு கொண்டுவராமல், அவ்வப்போது காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என அறிவிப்பு மட்டுமே செய்து, மக்களை ஏமாற்றிவருகிறது. இதுபோன்று மக்களை ஏமாற்றும் மத்திய, மாநில இரு அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து, காரைக்காலில் வரும் 11-ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் நடத்தவுள்ளது. இப்போராட்டம் புதுச்சேரி அரசை திரும்பிப்பார்க்கவைக்கும் என்றார் அவர். பேட்டியின்போது மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.