தனியார் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்கள்: ராமதாஸ் வரவேற்பு
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீதத்தை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகள் ஒதுக்கீட்டு பெற்றுத் தராத தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தலா ரூ.1 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதன் மூலம் முதுநிலை மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக மிகப்பெரிய தலைகுனிவை அரசு சந்தித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை திமுக அரசாக இருந்தாலும், அதிமுக அரசாக இருந்தாலும் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன.
தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு காரணமாக கடந்த 16 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 5 ஆயிரத்துக்கும் அதிகமான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் பணம் படைத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தத் துரோகத்துக்காக தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.