தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கிடம் சிபிஐ தீவிர விசாரணை

DIN

லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள நிலையில், குல்தீப் சிங் செங்கரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். 

பங்கார்மாவ் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரும், அவரது உதவியாளர்களும் கடந்த ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, 18 வயது இளம்பெண் ஒருவர் லக்னௌவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லம் முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளிக்க முயன்றார். அந்த முயற்சியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, 'பாஜக எம்எல்ஏ குல்தீப், அவரது உதவியாளர்களுக்கு எதிராக உன்னாவ் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தனது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும்' அவர் குற்றம்சாட்டினார்.

இதனிடையே, அந்த எம்எல்ஏவின் சகோதரரை தாக்கியதாக கூறி, இளம்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இளம்பெண்ணின் புகார் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, தனது அறிக்கையை மாநில அரசிடம் புதன்கிழமை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும்படி, காவல்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் (போக்ஸோ) பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

'போக்ஸோ' சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆனால், எம்எல்ஏ குல்தீப் சிங் இன்னமும் கைது செய்யப்படாதது குறித்து மாநில அரசின் முதன்மை செயலரும் (உள்துறை), காவல்துறை தலைமை இயக்குநருமான ஓ.பி. சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். 

அதற்கு, 'பாஜக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, அவரை கைது செய்வது குறித்து சிபிஐ அதிகாரிகளே முடிவெடுப்பார்கள்' என்றார். இதனிடையே, தன்னை ஹோட்டல் அறையொன்றில் மாவட்ட நிர்வாகத்தினர் சிறைவைத்துள்ளதாகவும், அங்கு தொலைபேசி, குடிநீர் போன்ற வசதிகள் இல்லை என்றும் அந்த இளம்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, பாலியல் பலாத்கார வழக்கில் எம்எல்ஏவை கைது செய்யாதது ஏன்? என்று மாநில அரசுக்கு கேள்வியெழுப்பிய அலாகாபாத் உயர் நீதிமன்றம் நீதிபதிகள், இதுதொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக வழக்கு சிபிஐ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில், குல்தீப் சிங் செங்கர் மீது போக்லோ சட்டதின்கீழ் 363 (ஆள் கடத்தல்), 366 (பெண் கடத்தல்), 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் அச்சுறுத்தல்), மூன்று வழக்குகளை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் இன்று காலை அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT