இந்தியாவில் இங்கிலாந்தின் முதலீடுதான் ஜி-20 முதலீடுகளில் மிகப்பெரியது: லண்டனில் கூட்டறிக்கை
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இங்கிலாந்து சென்றார்.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இங்கிலாந்து சென்றார். தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை அவர் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, லண்டன் விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். பின்னர், பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்த மோடி இந்தியா – பிரிட்டன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருதலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
உலகின் மிகப்பழமையான மற்றும் பெரிய ஜனநாயகங்கள் என்ற அடிப்படையில் உலக சவால்களை எதிர்கொள்ள இங்கிலாந்தும், இந்தியாவும் உறுதி பூண்டுள்ளன. காமன்வெல்த்துக்கு புத்துணர்ச்சி ஊட்டுதல், குறிப்பாக சிறிய, வலிமையற்ற அரசுகள் நிலைத்திருப்பதை உறுதி செய்வதில் நாம் உறுதியுடன் உள்ளோம். காமன்வெல்த் மக்கள் தொகையில் 60 சதவீதம் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் நாம் உறுதியுடன் உள்ளோம். இந்த சவால்களை எதிர்கொள்ள காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டம் முக்கியமான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
இந்த உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ முதல் நெறியான “பொதுவான எதிர்காலத்தை நோக்கி” என்ற கொள்கையின் கீழ், இணைந்து இதற்காக பாடுபடுவோம். குறிப்பாக இங்கிலாந்தும், இந்தியாவும் மேலும் நிலைத்த, வளமான, பாதுகாப்பான, நியாயமான எதிர்காலத்தை அனைத்து காமன்வெல்த் குடிமக்களுக்கும் உருவாக்குவதில் கீழ்க்கண்ட நடவடிக்கை எடுத்து உதவ உறுதியுடன் உள்ளது:
Advertisement
Advertisement
பிளாஸ்டிக் மூலமான மாசுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒருங்கிணைந்த உலக செயல்திட்டத்தை காமன்வெல்த்-ம் உலக சுற்றுச்சூழல் தினம் 2018-ன் ஏற்பாட்டாளர் என்ற வகையில் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்றல்.
கணினி பாதுகாப்புத் திறனை மேம்படுத்த காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு உதவும் செயல்முறை ஆதரவை வழங்குதல். உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதி உடன்பாட்டை அமல்படுத்த காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு உதவுதல். காமன்வெல்த் சிறு நாடுகள் அலுவலகத்துக்கு கூடுதல் ஆதரவு வழங்குதல்
நமது உலக தரமான புதுமைப்படைப்பு தொகுப்புகளிடையே அறிவு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, புதுமை படைப்பு, கூட்டாண்மை உருவாக்கம் ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்வோம். உயர் மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், உற்பத்தித் திறன் பெருக்கம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாடு, பகிர்ந்து கொள்ளப்பட்ட சவால்களை கையாள்தல் ஆகியவற்றில் நமது தொழில்நுட்ப வலுவை நாம் பயன்படுத்துவோம்.
நம்மிடையே வளர்ந்து வரும் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து – இந்தியா தொழில்நுட்ப மையத்தை இந்தியாவில் நிறுவுவதற்கு இங்கிலாந்து எடுத்துள்ள முயற்சிகளை இந்திய அரசு வரவேற்கிறது.
இந்தியா – இங்கிலாந்து நுட்ப முதன்மை நிர்வாக அதிகாரிகள் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி அறிவித்திருக்கிறோம். திறன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கவனத்தில் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை டெக் யூகே மற்றும் நாஸ்காம் இடையே கையெழுத்திட்டுள்ளோம்.
இங்கிலாந்துதான், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் புதுமைப்படைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கூட்டாளியாகும். புதிய வர்த்தக ஏற்பாடுகளை மேம்படுத்த துடிப்புள்ள புதிய இந்தியா – இங்கிலாந்து வர்த்தக கூட்டாண்மையை வடிவமைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் குறித்த கூட்டுப் பணிக்குழுவின் கீழ், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இங்கிலாந்தின் முதலீடுதான் ஜி-20 முதலீடுகளில் மிகப்பெரியது அதேபோல இங்கிலாந்தில் உள்ள இந்தியாவின் முதலீட்டுத் திட்டங்கள் 4-வது மிகப்பெரியதாகும். நமது பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்த புதிய முதலீடு குறித்த பேச்சு வார்த்தைகளை விரைவில் தொடங்குவோம். இந்தப் பேச்சுவார்த்தை நமது முன்னுரிமைகளையும், எதிர்கால வாய்ப்புகளில் ஒத்துழைப்பையும் மறு ஆய்வு செய்வதாக அமையும்.
இந்திய வர்த்தகத்துக்கு கூடுதல் ஆதரவு வழங்க இங்கிலாந்து செய்துள்ள முடிவை இந்தியா வரவேற்கிறது. இங்கிலாந்தில் இந்தியா முதலீடுகளுக்கென பரஸ்பர விரைவு வழி அமைப்பை உருவாக்கும் வகையில் இங்கிலாந்தின் இந்த ஆதரவு அமைந்திருக்கும். நெறிமுறைப்படுத்தும் சூழ்நிலையை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம் உதவும்.
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய முதலீடு மற்றும் அடிப்படை வசதி நிதியத்தின்கீழ், இந்திய அரசு இங்கிலாந்து அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பசுமை வளர்ச்சி பங்கு நிதியம் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறைக்கு போதுமான நிதியை வழங்கும். இருதரப்பினரும் உறுதியளித்துள்ள 120 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் என்ற உறுதியளிப்புடன் இந்த பசுமை வளர்ச்சி பங்கு நிதியம், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து 500 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் முதலீட்டை உருவாக்கும். இதனையடுத்து, 2022 – ல் 175 கிகாவாட் புதுப்பிக்கக்கூடிய மின்சக்தித் திறனை அடையும் இந்திய இலக்கு விரைவுபடுத்தப்படும். மேலும் தொடர்புடைய தூய்மை போக்குவரத்து தண்ணீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கும் முதலீடு செய்ய உதவும். எரிசக்தி அடிப்படைவசதி கொள்கை ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்பை எதிர்நோக்கியுள்ள நாம், நவீன நகரமயமாக்கலிலும் சேர்ந்து உழைக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை இந்தியாவும், இங்கிலாந்தும் ஏற்றுக் கொண்டுள்ளன. இணைப்புத் திட்டங்கள், நல்ல ஆளுகை, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சமூக மற்றும் சுற்றுச்சூழல் தரங்கள், நிதி பொறுப்பேற்கும் கொள்கைகள், பொறுப்பேற்கும் கடன் நிதிவசதி நடைமுறைகள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச கடப்பாடுகளை மதிக்கும் வகையிலும், தரங்கள், சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து காணக்கூடிய பயன்களை அளிக்க வல்லதாகவும் இவை அமையவேண்டும்.
பொறுப்புமிக்க சர்வதேச தலைமை
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்வதென்ற உறுதிமொழியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். பருவநிலை மாற்றத்தை சமாளித்து, பாதுகாப்பான, கட்டுப்படியாகக்கூடிய விலையில் நீண்டகாலத்திற்கு எரிசக்தி விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பதை ஒப்புக்கொண்ட இருதரப்பும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அறிவுத்திறன் பரிமாற்றம், திறன் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் திட்ட தயாரிப்பு போன்றவற்றின் மூலம் வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினத்தை குறைத்து, தூய்மையான எரிசக்தி விநியோகத் திட்டங்களில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டன.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்ட முன்முயற்சிகளை இங்கிலாந்து வரவேற்றுள்ளது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இருநாட்டு அரசுகளின் ஆதரவுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியும் லண்டன் பங்குச் சந்தையும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி வெற்றியடைந்ததையும் இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டணியில் இங்கிலாந்து இணைந்ததை வரவேற்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, சூரியசக்தி திட்டங்களுக்கு நிதியுதவி செய்வது, அடுத்த தலைமுறை சூரிய சக்தி தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்றவற்றில் இங்கிலாந்துக்கும் சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கும் இடையிலான உத்தேச ஒத்துழைப்பை பிரதிபலிப்பதுடன், சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் நோக்கங்கள் நிறைவேற ஆதரவளிப்பதில் இங்கிலாந்தின் சூரியசக்தி தொழில் துறையினரின் நிபுணத்துவத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்தது.
ஒரு நிதி அமைப்பு என்ற முறையில் லண்டன் பங்குச்சந்தை, சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாடுகளின் சூரியசக்தி திட்டங்களுக்காக 2030ம் ஆண்டுக்குள் 1000 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டுவது என்ற சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் நோக்கங்களை நிறைவேற்றுவதையும் எடுத்துரைப்பதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நிகழும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த சம்பவங்கள் உட்பட, பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதென்ற உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
நம் நாட்டு மக்களை பாதுகாக்க, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷே முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹக்கானி அமைப்பு, அல் கைதா, ஐஎஸ்ஐஎஸ் (தாயேஷ்) போன்ற சர்வதேச அளவிலான பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
இருநாடுகளுக்கும் வளத்திற்கும், ஊக்கமளிக்கும் வகையில் திறன் மற்றும் தகுதியை மேம்படுத்துவதற்கான துறைகளில், இங்கிலாந்தில் கல்வி பெறுவதையும் பணியாற்றுவதையும் இந்தியா வரவேற்கிறது. 2017ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து கலாச்சார ஆண்டாக வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதற்கும் இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.