முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் 4 கோடி தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும்: உலக வங்கி எச்சரிக்கை

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
worldbank082221
பகிர்:

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலைமை மேலும் மோசமடையும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டதால், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என சுட்டிக்‍காட்டிய உலக வங்கி, தெற்காசிய பிராந்தியங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிநாடு மற்றும் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மோசமாகப் பாதித்துள்ளனர். குறிப்பாக, இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே, சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப்பகுதிகளுக்கு திரும்பினர் என சுட்டிக்காட்டிய உலக வங்கி, இது எந்த வகையிலும் அவர்களுக்குத் தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளது. 

மேலும் இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த தொழிலாளர்களின் நிலை மேலும் மோசமடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

"இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் பணம் அனுப்புதல் சுமார் 23 சதவிகிதம் குறைந்து 64 பில்லியன் அமெரிக்க டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 5.5 சதவிகித வளர்ச்சிக்கும், 2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட 83 பில்லியன் அமெரிக்க டாலர் ரசீதுகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மாறுபாடு" என்றும்,  பணம் அனுப்புவது வளரும் நாடுகளுக்கு ஒரு "முக்கிய வருமான ஆதாரமாகும்"  என்று கூறியுள்ளது.

பணம் அனுப்புவது குடும்பங்களுக்கு உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை வாங்குவதற்கு உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

கொடிய கரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 26,48,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,84,352- க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →