திருவாரூர் : கட்டிய ஆறுமாதத்தில் இடிந்த பாலம்
வேலங்குடி-அகரமுகந்தனூர் இடையே சாலையில் கட்டப்பட்ட பாலம் ஆறு மாதத்தில் இடிந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேலங்குடி-அகரமுகந்தனூர் இடையே சாலையில் கட்டப்பட்ட பாலம் ஆறு மாதத்தில் இடிந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அகரமுகந்தனூர் கிராமத்திற்கு, கொல்லுமாங்குடி காரைக்கால் நெடுஞ்சாலையில் உள்ள வேலங்குடி கிராமத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போடும் பணி, பாரத பிரதம மந்திரி கிராம சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் 8 கோடி மதிப்பில் வேலை நடைபெற்று வருகிறது.
இந்த சாலையின் குறுக்கே செல்லும் பாசன வாய்க்கால் மீது கட்டப்பட்ட பாலம், கட்டிய ஆறு மாதத்துக்குள் அவ்வழியே சென்ற டிராக்டர் எடை தாங்காமல் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதே சாலைப் பணியில் கூட்டுறவு நிறுவனம் அருகே பாலம் கட்டிய 15 நாளில் இடிந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாலைப் போடும் பணி, மிகவும் மந்தமாக ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால் இந்த சாலையைக் கடக்கும் பொதுமக்கள், வாகனங்கள் தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த சாலைப் பணியினை அரசு அதிகாரிகள் யாரும் மேற்பார்வை செய்யாத காரணத்தினால், தரமற்ற வகையில் சாலைப் பணி நடைபெறுவதாகவும், அதனாலயே கட்டிய பாலங்கள் அடிக்கடி இடிவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு நிதியில் நடைபெறும் சாலைப்பணியினையும், பாலம் கட்டுமான பணிகளையும் அரசு அதிகாரிகள் நேரடியாக மேற்பார்வையிட்டு தரமான முறையில் செய்திட வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.