முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடியது மதுரை
மதுரை நகரில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முழு பொது முடக்கம் கடந்த 24 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மளிகை, காய்கறி, பால், மருந்து கடைகள், உணவகங்கள் மட்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை தவிர்த்து அனைத்து நிறுவனங்களுக்கும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கடும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதில் பால், மளிகை காய்கறி, உணவகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மதுரை நகரில் மளிகை காய்கறி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது.
மேலும் மதுரை நகரில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் மதுரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் கோரிப்பாளையத்தில் இருந்து ஏ.வி. மேம்பாலத்தை கடக்க முயன்ற ஒருசில வாகனங்களையும் அங்கு சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் தீவிரமாக விசாரித்த பின்னரே பாலத்தை கடக்க அனுமதித்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். விதிகளை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமுடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.