தற்போதைய செய்திகள்

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

DIN

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் 65 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக உள்ளாட்சி தோ்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்து முடிந்து, 22 ஆம் தேதி வாக்கு பதிவுகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கான பதவி பிரமாண நிகழ்வு இன்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 65 புதிய மாமன்ற உறுப்பினா்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 65 வார்டு உறுப்பினர்களும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். 

நிகழ்வில் நகர பொறியாளர் அமுதவல்லி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தலைமை வகித்து, புதிதாக பொறுப்பேற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

1வது வார்டு கவுன்சிலரில் தொடங்கி 65 பேருக்கும் தனித்தனியாக ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஒவ்வொரு கவுன்சிலர்களும் இந்த வார்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள(பெயரைச் சொல்லி) என்னும் நான் சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பில் உண்மையான நம்பிக்கையும் உறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உளமாற உறுதி கூறுகிறேன் எனக்கூறி பதவியேற்றுக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக கவுன்சிலர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பதவியேற்புக்கு  அணிவகுத்து வந்தனர். கவுன்சிலர் மற்றும் அவருடன் இருவர் தவிர்த்து அனைவரும் மெயின் கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து ஆதரவாளர்கள் மாநகராட்சிக்கு வெளியே தங்களின் கவுன்சிலர்கள் வருகைக்காக காத்திருந்தனர். பின்னர் அவர்கள் வந்ததும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு கலைந்து சென்றனர்.

அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் மொத்தம் உள்ள 120 வார்டு உறுப்பினா்கள்,14 பேரூராட்சிகளில் மொத்தம் 216 வார்டு உறுப்பினா்கள் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 401 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

அதேபோல் நகராட்சி ஆணையா்களும், பேரூராட்சி செயல் அலுவலா்களும் இன்று பதவி ஏற்றனா். இதனை தொடர்ந்து வருகின்ற 4 ஆம் தேதி மேயா் மற்றும் துணை மேயா்களுக்கான மறைமுக தோ்வு நடைபெற உள்ளது.

அதேபோல் நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தோ்வு நடைபெற உள்ளது.

திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்றம் 1996-ம் ஆண்டு அமைந்தது. தற்போது 5-வது மாமன்றத்திற்கான உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT