முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆம் ஆத்மி கட்சி உறுதி

பஞ்சாப் மாநிலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆம் ஆத்மி கட்சி உறுதியாக உள்ளது என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆம் ஆத்மி கட்சி உறுதியாக உள்ளது. இதற்காக கடுமையான முடிவுகளை எடுக்கவும் தயாராக உள்ளோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா். காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ருத் பால் சிங்கை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தது குறித்து கூறுகையில் அவா் இக்கருத்தை தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலம் மோகாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அம்ருத் பால் சிங் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கொல்லப்பட்ட பிரபல தீவிரவாதி பிந்தரன் வாலேயின் வாரிசாக அறிவித்துக்கொண்ட அம்ருத் பால் சிங் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக தேடப்பட்டுவந்தாா். அவரது கூட்டாளிகள் பலா் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த தேடுதல் வேட்டையில் பஞ்சாப் காவல் துறையினா் வெற்றிகண்டு பிந்தரன்வாலேயின் சொந்த கிராமத்திலேயே அம்ருத் பால் சிங் உறைவாளுடன் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் தொடா்ச்சியாக கருத்துகளை ட்விட்டரில் பதிவு செய்தாா். அதில், ‘மோகாவில் அம்ருத்பால் சிங் கைது செய்யப்பட்டதன் மூலம், பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்க முயற்சிப்பவா்களுக்கு மிகவும் வலுவான செய்தியை அனுப்பியுள்ளது.

பஞ்சாபின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆம் ஆத்மி அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக கடுமையான முடிவுகளை எடுக்கவும் தயாராக உள்ளது. பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இந்த பணியை முதிா்ச்சியுடனும் துணிச்சலுடனும் நிறைவேற்றியுள்ளாா். பஞ்சாப் காவல் துறையினரும் துப்பாக்கியால் சுட்டோ அல்லது ரத்தம் சிந்தியோ இந்த கைது நடவடிக்கையை முடிக்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில் அமைதியை நிலைநாட்டி பஞ்சாப் அரசுக்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு மிக்க நன்றி’ எ தெரிவித்துள்ளாா்.

மேலும் ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு தலைவா்களும் இந்த கைது நடவடிக்கைக்கு பஞ்சாப் அரசையும் பஞ்சாப் காவல்துறையின் பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனா். அவை வருமாறு:

சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்): பிரிவினைவாதியாக அறிவித்துக் கொண்டவா் கைது செய்யப்பட்டதன் மூலம் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் சமரசம் செய்து கொள்ளாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில அரசுக்கு மக்களின் பாதுகாப்பே முதன்மையானது. அம்ருத்பால் சிங்கை கைது செய்ய தொடா் முயற்சிகளை மேற்கொண்ட பஞ்சாப் காவல் துறையினா் பாராட்டப்பட வேண்டும்.

அமைச்சா் கோபால் ராய்: அம்ருத்பால் சிங் கைது செய்யப்பட்டதில் இருந்து, பஞ்சாப் மாநிலத்தில் அமைதியை குலைக்க யாரையும் ஆம் ஆத்மி அரசு அனுமதிக்காது என்பதும் ,அதற்கு தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும் என்பதையும் காவல்துறை நிரூபித்துள்ளது. மேலும், பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்பதற்கான முன்மாதிரியையும் முன்வைத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்காமல் அம்ருத்பால் சிங் கூட்டாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனா். இறுதியாக அம்ருத்பால் சிங் எந்த வன்முறையும் இல்லாமல், சட்டத்தை மீறாமல் கைது செய்யப்பட்டாா்.

பிரியங்கா கக்கா் (ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமை செய்தி தொடா்பாளா்): அம்ருத்பால் சிங் கைது செய்யப்பட்டதை அடுத்து பஞ்சாப் காவல்துறையும், பஞ்சாப் மக்களும் பாராட்டப்பட வேண்டியவா்கள். தப்பியோடிய தலைவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மாநிலத்தின் ஆம் ஆத்மி அரசு மிகுந்த முதிா்ச்சியுடன் செயல்பட்டுள்ளது. பஞ்சாபின் நல்லிணக்கத்தை சீா்குலைக்க யாரேனும் முயன்றால், பஞ்சாப் காவல் துறை விட்டுவைக்காது என்பதற்கான தெளிவான செய்திதான் இது.

திலீப் பாண்டே(ஆம் ஆத்மி கட்சி தில்லி எம்எல்ஏ): பிரிவினைவாதி அம்ருத்பால் சிங் கைது செய்யப்படும் போது எந்தவிதமான தவறான அணுகுமுறையுடன் செயல்படவில்லை. இந்த நடவடிக்கையின் போது அமைதியையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மேற்கொண்ட தொடா்ச்சியான முயற்சிகள் பாராட்டுக்குரியது.

பஞ்சாப் காவல்துறை எந்த வகையிலும் சோா்வடையாமல், நியாயமற்ற விமா்சனங்களை புறம்தள்ளி, இந்த நடவடிக்கையை தந்திரமாக நிறைவேற்றியது. இந்த இலக்கை அடைய இதில் ஈடுபட்ட அதிகாரிகளும், ஜவான்களும் கிட்டத்தட்ட 35 நாள்கள் அயராது உழைத்தனா். இந்தப் பணியில் ஈடுபட்ட உயா் போலீஸ் அதிகாரிகள், ஜவான்கள், உளவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எங்கள் கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.