பிகார் மாணவர் கொலை: கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு!
பாட்னா: கல்லூரியில் மாணவர் ஒருவரை சிலர் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிகார் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
பாட்னாவில் உள்ள பிஎன் கல்லூரியில், மாணவர் ஒருவர், முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஹர்ஷ் குமார் (22) திங்களன்று (மே 27) தேர்வுக்குச் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த, அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரை தாக்கியுள்ளனர். மாணவரை அவர்கள் ஆயுதங்களால் தாக்குவது கல்லூரி வளாகத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவருக்கு நீதிவேண்டி, பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
பிகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாட்னா பல்கலைக்கழகத் துணைவேந்தர், பாட்னா மாவட்ட அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மூவரையும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, இவ்வழக்கு குறித்த தகவல்களை கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் ஏதேனும் கிடைத்தால், உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Advertisement
இவ்வழக்கு தொடர்பாக பாட்னா கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் செவ்வாய்க்கிழமை (மே 28) கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தசரா விழாவின்போது ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர், ராஷ்டிரிய ஜனதா தளக்கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளக்கட்சியைக் கண்டித்து, ”பிகாரில் நல்லாட்சி இல்லை; சில நாள்களுக்கு முன்பு, சவுரவ் படேல் மசௌதியில் கொலை செய்யப்பட்டார், சந்தன் ராய் சாப்ராவில் கொலை செய்யப்பட்டார், நேற்று பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஹர்ஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மத்தியில் அச்சம் இல்லை" என்று கூறினார்.